கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய புலியைப் பிடித்து வண்டலூர் கொண்டு சென்றனர்
Share
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிடிபட்ட புலி வண்டலூரில் உள்ள சிகிச்சை மையத்தை சென்றடைந்தது. அங்கு டாக்டர்கள் புலிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிற்றாறு சிலோன் காலனியில் புலி ஒன்று வந்தது. ஆடுகள், நாய்களை வேட்டையாடிய இந்த புலியை பிடிக்க நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கூண்டுகள் அமைக்கப்பட்ட பின்னரும் புலி சிக்கவில்லை.இதனால் புலி பாதுகாப்பு கருதி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கருதினர்.
எனினும் முதுமலையில் இருந்து புலிகளைப் பற்றி நன்றாக அறிந்துள்ள டைகர் டிராக்கர் பணியில் ஈடுபட்டு வரும் 4 பழங்குடியினர் குழுவை கடந்த வாரம் வைத்து, புலி சிற்றாறு பகுதியில் உள்ளதா என்பதை கண்காணித்ததுடன் ஒருவேளை புலி மீண்டும் வந்தால் அதனை பிடிப்பதை பற்றி பயிற்சி அளித்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் மருதம்பாறை பகுதிக்கு திரும்பி வந்த புலி 4 ஆடுகளை அடித்து கொன்றது.
இதனையடுத்து டைகர் டிராக்கர் குழு, கூண்டு சகிதம் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான வனத்துறையினர் புலியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில்
பேச்சிப்பாறை கல்லறை வயல் பகுதியில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இதன் பின்னர் சீரோ பாய்ண்டில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் புலியை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் அதற்கு குளுக்கோஸ் செலுத்தினர். இதனையடுத்து புலி கண் விழித்து பின்னர், 3 வனவிலங்குகள் மீட்பு வாகனங்கள் சைரன் ஒலித்தபடி செல்ல டெம்போவில் கூண்டுடன் புலி சென்னை வண்டலூர் கொண்டு செல்லப்பட்டது. புலியுடன் மாவட்ட வன அலுவலர் இளையராஜாவும் உடன்
சென்றுள்ளார். இன்று (ஆக 10) மதியம் 12 மணியளவில் வண்டலூர் புலி சென்றடைந்தது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது:
புலிகளின் சராசரி ஆயுட்காலம் 15 வயது. தற்போது பிடிபட்ட புலிக்கு 13 முதல் 14 வயது இருக்கலாம். இது தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. எனவே முறையான சிகிச்சை இன்றி அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு விடுவது புலிக்கு ஆபத்தாக முடியலாம். மேலும், வயதும் முதிர்ந்துள்ளதால் அதன் பாதுகாப்பு கருதி வண்டலூர் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு பொதுமக்களின் காட்சிக்கு கூண்டில் இந்த புலி அடைக்கப்படாது. வண்டலூர் மிருக காட்சி சாலையின் பின்புறம் உள்ள வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் புலியை மிருக காட்சி சாலை மருத்துவ குழுவினர் அதன் உடல் நிலையை கண்காணித்து உரிய சிகிச்சை அளிப்பார்கள். காலை அதற்கு இறைச்சி உணவாக வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.













