3 தமிழக விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பற்றி பெருமிதம்: ‘இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல்’ முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
Share
“சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவுப் பரப்பில் தடம் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ள வரலாற்றுச் சாதனை இது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலவில் இந்தியா! சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவுப் பரப்பில் தடம் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ள வரலாற்றுச் சாதனை இது. இதற்காக அயராது பாடுபட்டுப் புதுமையை நிகழ்த்தியுள்ள ஒட்டுமொத்த அணியினருக்கும் எனது பாராட்டுகள். இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல்!” அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழகத்திற்கு ஒரு மகத்தான சாதனை உணர்வைக் கொண்டுவருகிறது. மயில்சாமி அண்ணாதுரை, எம் வனிதா, இப்போது பி வீரமுத்துவேல் ஆகிய மூன்று சந்திராயன் பயணங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர்களால் வழிநடத்தப்பட்டுள்ளன. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.
தமிழ்நாட்டின் இளம் திறமையாளர்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நமது இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பங்களிக்குமாறு நான் ஊக்குவிக்கிறேன்!
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.













