LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கில் படையினருக்காக மேலும் பல்லாயிரம் ஏக்கர் நிலம் கோரப்படுகின்றது, ஆனால் காணி இல்லாதோருக்கும் ஏதுமில்லை

Share

நடராசா லோகதயாளன்

வடக்கு-கிழக்கு மாகாணத்தில்  தற்போதும்  படையினரின் பாவனைக்கு அரச மற்றும் தனியார்  நிலங்களை சுவீகரித்து தருமாறு பாதுகாப்பு அமைச்சு  கோருவது   தகவல் அறியும் சட்டம் மூலமான பதிலில் உறுதியாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் படையினரின் பாவனைக்கென 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை சுவீகரித்து தமக்குத் தருமாறு மாவட்டச் செயலகங்களை பாதுகாப்பு அமைச்சு கோரி நிற்கின்றது என மாவட்டச் செயலகங்கள் உறுதி செய்கின்றன. 

வடக்கின் 5 மாவட்டங்களிலும் படையினர் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் முகாம் அமைந்து நிலைகொண்டுள்ளனர். இவ்வாறு படையினர்  நிலைகொண்டுள்ள நிலங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகள், அரச காணிகள், மற்றும் திணைக்களங்களிற்குச் சொநதமானகாணிகள் எற்பவற்றுடன் பாதுகாப்பு அமைச்சிற்கு உரித்தாக்கப்பட்ட  நிலங்களும் உள்ளது. 

இதிலே தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகளை படையினரின் நிரந்தரப் பயன்பாட்டிற்கு வழங்குவதானால் சட்டப்படி சுவீகரிக்கும் பணியை பிரதேச செயலகம் மற்றும் நில அளவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நில உரிமையாளரின் ஒப்புதலுடன் மேற்கொள்ள வேண்டும். எனவே அந்த நிலங்களை அளவீடு செய்ய நில அளவைத் திணைக்களத்திடமும் நிலங்களை சுவீகரிப்பதற்கு பிரதேச செயலாளரிடமும் இதன் விபரங்களை அளிக்குமாறு படையினர் எழுத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.  

இந்த விபரங்களிற்கமைய  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 214 ஏக்கர் நிலம் படையினரிடம் உள்ளது. இதேநேரம் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் காணிகளை சுவீகரித்து தருமாறு படையினர் மாவட்டச் செயலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களை எழுத்தில்  கோரியுள்ளனர். 

இதில் யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள  3214 ஏக்கரில் பல இடங்களள் கோரப்படுவதோடு கிளிநொச்சியில்  220 ஏக்கரும் முல்லைத்தீவில் 1,508 ஏக்கர் நிலைத்தையும் சுவீகரித்து பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்குமாறு   படையினர் கோருகின்றனர். இதேபோன்று  மன்னாரில்  1060 ஏக்கர் நிலத்தையும்  வவுனியாவில்  301 ஏக்கர் நிலத்தை கோருவதாக அந்த அந்த மாவட்டச் செயலகங்களிற்கு விண்ணப்பித்த தகவல் அறியும் சட்டத்திற்கான பதிலில் உறுதிப்படுத்தப்பட்டு பதில்  வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய வடக்கில் மட்டும்  6 ஆயிரத்து 286 ஏக்கர் தனியார் காணிகள் படையினர் வசம் உண்டு என மாவட்டச் செயலகங்கள் உறுதி செய்கின்றன. 

படையினர் கோரும்  இந்த நிலங்களிற்கு அப்பால் படையினரின் நிரந்தர முகாம் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிற்கு பல அரச நிலங்கள் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் பாதுகாப்பு அமைச்சிற்கு என்றே நிலங்கள் பாரதீனப்படுத்து விட்டமையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு பாரதீனப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பில்  மாகாண காணி ஆணையாளர் செயலகத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  விண்ணப்பித்தபோது  வடக்கில்  32 அரச காணிகள் மக்களிற்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளிற்கோ  தெரியாது மாகாண ஆளுநரால் படையினருக்கு என நிரந்தரமாக  பாரதீனப்படுத்தப்பட்டு விட்டமை  உறுதி  செய்யப்பட்டுள்ளது. 

அரச காணிகளை அந்த பி்ரதேசத்தின் பொதுப் பயன்பாட்டிற்காக ஒப்படைக்க வேண்டும் என மாவட்டச் செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்   நீண்ட காலமாக  கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இருந்தபோதும் அரச காணிகள் இரகசியமான முறையில் சில அரச  அதிகரிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சிற்கு வெஸ்ரிங் செய்யப்பட்டு பிரதேச செயலாளர்களிடம் இருந்த உரிமை பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறு வடக்கு மாகாணத்தில் உரிமை மாற்றம் செய்யப்பட்ட விபரம்  தொடர்பில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக வழங்கிய பதிலில்  2020, 2021, 2022 ஆகிய 3 ஆண்டுகால எல்லைக்குள் மட்டும் 32 அரச  காணிகள் பாதுகாப்பு அமைச்சிற்கு   ஆளுநரால் கையளிக்கப்பட்ட விபரம் வழங்கப்பட்டுள்ளதனால் அவை படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், கடற்படை, விமானப் படையினர் ஆகியோர் தற்போது  நிலைகொண்டுள்ள 32  இடங்கள்  அவர்களிற்கு என்றே  நிரந்தரமாக வெஸ்ரிங் செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய வடக்கில்  22 ஹெக்டேயர் அல்லது 54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த  32 இடங்களில் ஒரேயொரு இடம்  விமானப் படையிரின் பயன்பாட்டிற்காக முல்லைத்தீவு மாவட்டம்  கேப்பாபுலவில் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அதேபோன்று 3 இடங்கள் இராணுவத்தினருக்கும் எஞ்சிய 28 இடங்களும் கடற்படையினரின் பயன்பாட்டிற்காகவும் வழங்கப்பட்டுள்ளமையும்   உறுதி செய்கின்றது.  

இந்த 3 ஆண்டுகளிலும் 2020 ஆம் ஆண்டு 16  முகாம்களிற்காக  9 ஹெக்டேயரும், 2021 இல் 6 முகாமிற்காக  6.5 ஹெக்டேயர் நிலங்களும் வழங்கியுள்ள அதேநேரம்  2022 ஆம் ஆண்டில் 10 முகாம்களிற்காக  6 ஹெக்டேயர் நிலமும்  வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில், முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பதவிக் காலத்தில் 12 முகாம்களிற்குரிய  நிலங்கள்  வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  இந்த 12 நிலங்களும் வழங்கப்பட்டுள்ள போதும் வடக்கு மாகாணத்தில் மட்டும் இன்றும் 21 ஆயிரம் குடும்பங்கள் குடியிருப்பதற்கே காணி இன்றி இருப்பதாக  மாவட்டச் செயலகங்களின் தரவுகள் உறுதி செயகின்றன. 

இவற்றிற்கும் மேலாக வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், விவசாயத் திணைக்களங்களின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் படையில் நிலைகொண்டுள்ளபோதும் வடக்கில் தற்போது படையினர் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டுமே நிலை கொண்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருப்பது தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார்.

இவை தொடர்பில் எதிர்வரும் சந்திப்புக்களின்போது கண்டிப்பாக விவாதிக்கும் நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். 

படையினர் தனியார்அரச காணிகளை சுவீகரித்து தருமாறு கோருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்:

”படையினர் சுவீகரித்து தருமாறு கோரிய தனியார் நிலங்கள மட்டுமே இவையாகும். ஏனைய அரச திணைக்கள நிலங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரம் ஏக்கரை படையினர் கோருகின்றனர். படையினர் இந்த தனியார் நிலங்களையேனும் உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும் என நாம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தாலும் அது அரசிற்கு செவிடன் காதில் ஊதிய சங்கின் ஒலியாகவே உள்ளது. இதனாலேயே தினமும் தனியார் காணியை அபகரக்க முயல்வதும் நாம் ஓடிச் சென்று தடுப்பதுமாகவே உள்ளது. தினமும அதிகாலையில் இதற்காகவே பத்திரிகைகளை புரட்ட வேண்டியுள்ளது. எம்மைப் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களிற்கு ஏதும் உருப்படியாக செய்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு இடம்பெறுவதோடு அந்த நிலத்தின் மக்களை பந்தாடும் விதமாககவே அனைத்து அரசுகளும் செயல்படுகின்றன. அதற்கு இன்றைய ரணில் அரசும் விதி விலக்கல்ல” என்றார்.