LOADING

Type to search

இந்திய அரசியல்

ஓணம் பண்டிகை: ஊஞ்சல், நடனமாடி குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

Share

கேரளாவைப் போல, கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று (ஆக 29) ஓணம் பண்டிகை கோலகாலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர்.

கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் ஓணம் கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைவதற்கு முன் கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தான் இருந்தது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிக அளவில் மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், தக்கலை அருமனை உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் கொண்டாட்டம் வெகு விமர்சையாக
கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே வீடுகளில் அத்தபூகோலமிட்டனர். பின்னர் கசவு என்று சொல்லக்கூடிய வெண்ணிற புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். குறிப்பாக பெருமாள் கோவில்களில் பெருமளவில் பக்தர்கள் குவிந்தனர்.

சுசீந்திரம் தாணுமாயன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோவில், கோட்டாறு ஏழகரம் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் காலையிலேயே ஆண்கள், பெண்கள் பெருமளவில் வந்து தரிசனம் செய்தனர். பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.

கோவில்களில் தரிசனம் செய்த பின் வீடுகளில் ஓணம் ஊஞ்சல், ஓணம் பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் மூலம் மகிழ்ச்சியாக இருந்தனர். ஓணம் என்றாலே ஓணம் விருந்து முக்கியமானதாகும். புத்தரிசி மாவில் அடை, அடை பிரதமன், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், அவியல், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரை புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிகறி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிகாய் குழம்பு, அப்பளம், சீடை, ஊறுகாய், பால் பாயாசம், அடை பாயாசம், சிறு பருப்பு பாயாசம் என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

ஓணத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று(29ம் தேதி ) உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டிருந்தது. தோவாளை பூ மார்க்கெட்டில் விடிய விடிய பூக்கள் விற்பனையும் நடந்தது.