LOADING

Type to search

இந்திய அரசியல்

கொடநாடு வழக்கை மத்திய புலனாய்விடம் ஒப்படையுங்கள் – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Share

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு மூலை முடுக்கு முதல் கிராமம், பட்டிதொட்டி வரை சென்றடைந்தது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் சாமியை தரிசனம் செய்தேன்.

கே: கொடநாடு என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கு குலை நடுக்கம் ஏற்படுகிறது என்று தி.மு.க. அதிகாரப்பூர்வ முரசொலி பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார்களே? உண்மையை சொல்லத் தயார் என்று அவர் ஏன் கூடுதல் காவல்துறை விசாரணைக்கு வரவில்லை? வந்திருந்தால் நம்பலாம்? என்று அதில் கூறி இருக்கிறார்களே?

ப: நான் சட்டசபையிலே இதுபற்றி கேட்டேனே? அப்போதே முதலமைச்சர் சொல்லியிருக்கலாம். பல கேள்விகள் எழுப்பினேன். அப்போது ஏன் வாய்மூடி இருந்தார்கள். இவர்கள் வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள். ஒரு முதலமைச்சர் இருக்கிறபோது பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எத்தனை பேர் இறந்தார்கள். அதையெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோமா? திருப்பி கொண்டு வரமாட்டோமா? அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒரு சம்பவம் நடைபெறுகிறது. நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறுகிறது. இதை மட்டும் ஏன் மையமாக வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நான் இதுபற்றி அடிக்கடி தெளிவுபடுத்தி உள்ளேன். இதுபற்றி சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். ஏன் அவர்கள் அதைப்பற்றி மட்டும் குறிப்பிடவில்லை? அந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு. குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசு. வழக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்றது. அப்போது அந்த குற்றவாளிகளுக்கு வாதாடுவதற்கு, ஆஜரானது தி.மு.க. வழக்கறிஞர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடி இருக்கிறார். இதை ஏன் சொல்லமாட்டேன் என்கிறார்கள். நீங்களும் வெளியிடுவது கிடையாது. தெளிவுப்படுத்தியது கிடையாது. இதில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள். இதில்தான் சந்தேகம் ஏற்படுகிறது. நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். இந்த அரசுக்கு சொல்கிறேன். இதை ஏன் மத்திய புலனாய்வு. விசாரிக்க கூடாது. மத்திய புலனாய்விடம் வழக்கை ஒப்படையுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.