குமரிக் கடல் சீற்றம்: கப்பலில் வந்த மத்திய அமைச்சர்கள் தத்தளிப்பு
Share
கடல் சீற்றத்தால் கப்பலில் இருந்து படகுக்கு வர முடியாமல் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் கடலில் ஒன்றிய அமைச்சர்கள் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர் குறைகளை தீர்க்க ‘சாகர் பரிக்கிரமா’ என்ற யாத்திரையை ஒன்றிய அரசு தொடங்கி உள்ளது.
மீனவர்களின் பிரச்சனைகள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்ளவும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், கடலோர பகுதிகளின் மீனவர்களுக்கான திட்டங்களை பிரபலப்படுத்தவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கிய யாத்திரை இன்று (ஆக 31) கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம்
வந்தடைந்தது. இந்த குழுவில் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் முருகன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா, முருகன் ஆகியோர் காலை 8.30 மணிக்கு தேங்காய்ப்பட்டினம்வருவதாக அறிவிப்பு வெளியானது. அதற்காக
திருவனந்தபுரத்திற்கு வந்து அங்கு தங்கி இருந்தனர். நேற்று காலையில் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பலில் அவர்கள் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் புறப்பட்டு வந்தனர். அவரை வரவேற்று தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் அழைத்துக் கொண்டு வர தனியார் விசைப்படகுகள் சென்றன.
துறைமுகம் அருகே வந்தபோது அங்கு காற்று பலமாக வீசிக்கொண்டு இருந்தது. மேலும், அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து அலை அடித்துக் கொண்டிருந்ததால் கடற்கரைக்கு சொந்தமான சிறு கப்பலில் இருந்து துறைமுகத்தின் உள்ளே வரும் தனியார் படையில் அமைச்சர்கள் ஏற முடியாமல் தவித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கடலில் கடற்படையின் கப்பலில் அமைச்சர்கள் தவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நிகழ்ச்சி தொடங்குவதும் தாமதமானது.
பின்பு, மத்திய அமைச்சர்கள் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் தொடங்கி குறும்பனை, வாணியக்குடி, குளச்சல், முட்டம் மீனவ கிராமங்கள் சென்று அந்தந்த பகுதி மீனவ மக்களுடன் கலந்துரையாடினர். பின்னர் மாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மீனவர்களுக்கு ‘கிசான் கிரெடிட்’ கார்டுகளை வழங்கி பேசினர்.













