பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரிக்கு புதிய பொறுப்பு: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
Share
ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்பி ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
தெற்கு டில்லி தொகுதியின் பாஜக எம்.பியான ரமேஷ் பிதுரி. இவர் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக எம்.பியான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரமேஷ் பிதுரியின் பேச்சுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார்.
அதேபோல், சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடுமையான எச்சரிக்கையை ரமேஷ் பிதுரிக்கு விடுத்தார். அதோடு, ரமேஷ் பிதுரியிடம் விளக்கம் கேட்டு பாஜக அறிக்கை அனுப்பியிருந்தது. நாடாளுமன்றத்தில் சக உறுப்பினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்திய ரமேஷ் பிதுரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக எம்பி ரமேஷ் பிதுரியை அக்கட்சி நியமித்துள்ளது. வெறுப்பு பேச்சுக்கான வெகுமதியாக புதிய பொறுப்பை ரமேஷ் பிதுரிக்கு பாஜக கொடுத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.













