LOADING

Type to search

இலங்கை அரசியல்

புதிய சட்டமூலங்கள் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

Share

அந்தப் ‘பழைய’ பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் வேட்டை பற்களுக்குள் சிக்கித் தப்பிப் பிழைத்த ஜேவிபிதான் இப்பொழுது அரசாங்கத்தின் அடித்தளமாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் போராடியபோது ஜேவிபியும் அவர்களோடு காணப்பட்டது. அதே ஜேபிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது நாட்டை ஆள்வதற்கு ஒரு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது.

பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலும் 40 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்ததாக,ஒரு சிங்கள மனித உரிமைச் செயற்பாட்டாளர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முக்கிய சட்டச் செயற்பாட்டாளர்கள் மேற்படி சட்டமூலத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். “முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும் மக்களின் சுதந்திரத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு காலாவதியான சட்டக் கட்டமைப்பு” என்று கூறுகிறார் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவஸிறி “1979 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட இந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது, அவை பயங்கரவாதத்தை அடக்கியதை விட மக்களின் அரசியல் சுதந்திரம்,கருத்துச் சுதந்திரம் மற்றும் போராட்டங்களை நடத்தும் ஜனநாயக வழிகளை அடக்குவதற்கே தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது புலனாகிறது. மறுபுறம், 1980களில் வடக்கிலும் தெற்கிலும் ஆயுதமேந்திய எழுச்சிகள் மேலும் தீவிரமடைவதற்கே இத்தகைய கடுமையான சட்டங்கள் காரணமாயினவே தவிர, அவற்றினால் வன்முறைகள் கட்டுப்படுத்தப்படவில்லை.”என்றும் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவஸிறி கூறுகிறார்.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் மட்டுமல்ல,சிவில் சமூகச் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக முன்மொழிக்கப்பட்ட மற்றோரு புதிய சட்டமூலம் தொடர்பாகவும் சிவில் சமூகங்கள் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன..” புதியதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டம், சிறிய சமூகக் குழுக்களைக்கூட அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடும்.மரண உதவிச் சங்கங்கள் முதல் சீட்டுச் சங்கங்கள் மற்றும் லயன்ஸ் கழகங்கள்வரை, தங்கள் சமூகங்களுக்கு உதவுவதற்காக ஒன்றிணைந்து செயற்படும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படலாம். இது நிதிக் குற்றங்களைத் தடுப்பதைப் பற்றியது மட்டுமல்ல.மாறாக,சிவில் சமூகச் செயற்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதைப் பற்றியது”

அதுபோலவே, மற்றொரு சட்டமூலம்,”ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்”, ஒக்டோபர் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதன்முறையாக வாசிக்கப்பட்டது.இது இன்னும் சட்டமாக மாறவில்லை. “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றுடன் ஒருவர் தொடர்புடையவரா என்பதைத் தீர்மானிக்கும்போது, அந்த நபரின் தலைமுடி அலங்காரம், பச்சை குத்தல்கள் அல்லது ஆடைகளை நீதிமன்றங்கள் கருத்தில்கொள்ள அனுமதிக்கும் ஏற்பாடும் இந்தச் சட்டமூலத்தில் இருப்பதாக” சட்டத்தரணி சாலிய பீரிஸ்- இவர்,இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தவர் -தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிபிஎஸ் பிளஸ் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்காக அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் அதேசமயம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட விடயங்களை உத்தேச ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான’ சட்டமூலத்திற்குள் உள்ளடக்க முயற்சிக்கிறது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“PTA சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA),சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் ஏற்பாடுகளை நீக்கும்” என்று கூறும் அவர், “PTA சட்டத்தின் கீழ் இத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் பயன்படுத்தப்பட்டமை, பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் துறையினரிடையே சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான ஒரு சூழலை உருவாக்கியுள்ளதாகவும்” குற்றம் காட்டுகிறார்.

“எனினும்,அரசாங்கத்தினால் தனியாக முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) பதவியிலிருந்து அதற்கு மேற்பட்ட பதவிகளிலுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், அதேபோன்ற ஏற்பாடுகளை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாகவும்” சாலிய பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும் மேற்சொன்ன துறைசார் நிபுணர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரின் குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி அரசாங்கம் இப்பொழுது மேசையில் வைத்துள்ள சட்டங்களை சில திருத்தங்களோடு அல்லது திருத்தங்கள் இல்லாமலேயே நிறைவேற்றப்படும் ஆபத்து அதிகம் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னெழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்து புதிய சட்டமூலத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். தமிழ்ப் பகுதிகளில் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் மேற்படி சட்டமூலங்களுக்கு எதிராக ஆங்காங்கே போராடி வருகிறார்கள்.

யார் போராடினாலும், போராடவிட்டாலும் மேற்படி சட்டமூலங்களை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திடம் உண்டு. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து அரசாங்கம் விரும்பிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும். எனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதற்காக அந்தச் சட்டம் மக்களுக்கு, குறிப்பாக சிறிய தேசிய இனங்களுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை.

எல்லா நாடுகளிலும் சட்டம் எனப்படுவது அங்குள்ள பெரும்பான்மை பலத்த கொண்ட அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுகிறது. அது சொர்க்கத்தில் நிறைவேற்றப்படுவது அல்ல. சட்டங்களை அரசியல்வாதிகள்தான் நிறைவேற்றுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக யார் இருக்கிறார்களோ அவர்கள் வைத்ததுதான் சட்டம்.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கூரான கத்தி ஆகிய பயங்கரவாதத் தடைச் சட்டமும் அப்படித்தான்.அவசர காலச் சட்டமும் அப்படித்தான். இப்பொழுது அரசாங்கம் மேசையில் வைத்திருக்கும் சட்டமூலங்களும் அப்படிப்பட்டவை தான். தமிழ் மக்கள் மக்களுடைய எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்களுக்குச் சட்டங்கள் தேவை. அது பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகவும் இருக்கலாம்; அவசரகாலச் சட்டமாகவும் இருக்கலாம்; ஏன் பெருந் தொற்று நோய் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டமாகவும் இருக்கலாம்.

அதனால்தான் சட்டப்படியானவை எல்லாம் அல்லது “சட்டரீதியானது என்பது நீதியின் பார்ப்படட ஒரு விடயம் அல்ல,அது அதிகாரத்தின் பாற்பட்ட ஒரு விடயம்” என்று ஓர் ஆங்கில வாசகம் உண்டு. ”Apartheid was legal. The Holocaust was legal. Slavery was legal.Colonialism was legal. Legality is a matter of power, not justice”-“அடிமைமுறை சட்டப்படிதான் முன்னெடுக்கப்பட்டது. குடியேற்றவாதம் சட்டப்படிதான் முன்னெடுக்கப்பட்டது. ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான இன அழிப்பு சட்டப்படிதான் முன்னெடுக்கப்பட்டது. தென்னாபிரிக்காவில் இனஒதுக்கல் சட்டப்படிதான் முன்னெடுக்கப்பட்டது”. இலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான போர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் வேட்டை பற்களுக்குள் சிக்கித் தப்பிப் பிழைத்த ஜேவிபிதான் இப்பொழுது அரசாங்கத்தின் அடித்தளமாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் போராடியபோது ஜேவிபியும் அவர்களோடு காணப்பட்டது. அதே ஜேபிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது நாட்டை ஆள்வதற்கு ஒரு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது.

“இன அடிப்படையிலான தேசியவாதம் நம் நாட்டில் இன்னும் மறைந்திருக்கிறது; அது முழுமையாக ஒழியவில்லை” என்று விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளுக்கான அமைச்சர் கே.டி. லால் கந்த கூறியுள்ளார். “வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எவரும் காணமுடியும்.” “இது மீண்டும் தலைதூக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்”… “இத்தகைய போக்குகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்;தடுக்கப்பட வேண்டும்.” என்றும் அமைச்சர் லால் கந்த தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அடித்தளமாகக் காணப்படும் ஜேவிபியின் தீர்மானிக்கும் சக்திகளில் லால் கந்தவும் ஒருவர். அவர் கூறுவதுதான் அரசாங்கம் மேசையில் வைத்திருக்கும் சட்ட மூலங்களின் மெய்யான நோக்கம் ஆகும். நாடாளுமன்றத்தில் யார் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்கள் எல்லாரும் ஒரு விடயத்தில், அதாவது தமிழ் மக்களின் தேசிய இருப்பை இல்லாமல் செய்யும் விடயத்தில்,மிகத்தெளிவாக முடிவெடுப்பார்கள் என்பதைத்தான் அமைச்சர் லால் கந்தவின் கூற்று வெளிப்படுத்துகின்றதா?