கனடா- ஸ்காபுறோவில் நடைபெற்ற பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் நூற்றாண்டு விழாவும் நினைவு மலர் வெளியீடும்!
Share
சென்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் ரொறன்ரோவில் உள்ள தமிழிசைக் கலா மன்றத்தில் மொழியியல் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் நூற்றாணடு விழா கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து, கனடா பண் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து வரவேற்பு நடனமும், கனடா, அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு அவர்களின் வரவேற்புரையும் இடம் பெற்றன.
கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களி உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பல்கலைக்கழகத்தில் படித்த நாட்களில் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களுடன் பழகிய மறக்க முடியாத சில நினைவுகளைக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பேராசிரியர் ஆ. சதாசிவம் அதிகம் கவனம் செலுத்திய ஆக்கங்களில் இருந்து சுமேரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள தொடர்புகளைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேராசிரியர் இ. பாலசுந்தரம், திருமதி பூங்கோதை பாலராஜன் ஆகியோரால் தொகுக்கப்பட்ட நூற்றாண்டு நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப் பெற்றது. 522 பக்கங்களைக் கொண்ட இந்த நூலைத் தொகுத்து எமக்களித்த பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் மலர்ச்செண்டு வழங்கிக் கௌரவித்தார். தொடர்ந்து பேராசிரியர் ஆ. சதாசிவத்தின் மகனான மதியழகன் ஆறுமுகம் அவர்களின் உரையும் இடம் பெற்றது.
அராலி தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் ஆ. சதாசிவம் 1948 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். 1952 ஆம் ஆண்டு சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றார். உதவி விரிவுரையாளராக அங்கே பணியாற்றி 1954 ஆம் ஆண்டு முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். ஆங்கிலம், வடமொழி, பாளி, மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றுக் கொண்டார். ‘சுமேரியன் ஒரு திராவிட மொழி’ ‘சுமேரிய – திராவிடம்’ போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் வெளியிட்டார். கருத்துரைக்கோவை, ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம், ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை, ஞானப்பள்ளு, தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி, மொழியியலும் தமிழ் மொழி வரலாறும், ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதி, மொழி இலக்கியம் இறைநெறி போன்ற நூல்களைத் தமிழில் தந்துள்ளார். பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் மனைவி திருமதி திருஞானேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் அமெரிக்காவில் இருந்து வருகைதந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திரு. குமரகுரு கணபதிப்பிள்ளை, திருமதி சசிகலா ஜீவானந்தன், திரு. சோம ஸ்ரீகதிர்காமநாதன், கலாநிதி கவிதா சிவாகரன் ஆகியோர் ஆய்வுரை வழங்கினார்கள். திருமதி விமலா பாலசுந்தரம் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத் திருமதி ஜோதி ஜெயக்குமார் சிறப்பாகப் பணியாற்றினார்.
குரு அரவிந்தன்










