LOADING

Type to search

இந்திய அரசியல்

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்

Share

த.வெ.க.வைச் சேர்ந்த கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வி.எஸ்.பாபு திராவிட இயக்கத்தில் பற்று கொண்டு பணியாற்றி, தி.மு.கழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதன் பின்னர் அண்மையில் 2026-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக முன்னாள் முதல்-அமைச்சரை எதிர்த்து, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் களத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினரானவர். அவர் பிணிவயப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சர், பாபு நலம்பெற வேண்டும் என்று விரும்பிய நிலையில், மருத்துவர்கள் எவ்வளவோ உயர் சிகிச்சை தந்தும் அது பலனிக்காமல் உயிர் நீத்தார்.

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு என்று வாழ்க்கை நிலையாமையைப் பற்றி திருவள்ளுவர் குறள் மொழி சொன்னார். மரணம் தவிர்க்க முடியாதது என்றாலும், அப்படி உயிரிழக்கின்ற நேரத்தில் மனைவி, மக்கள், உற்றார், உறவினர், பழகிய நண்பர்கள் தாங்க முடியாத துக்கத்திற்கும், துயரத்திற்கும் ஆளாவார்கள். சகோதரர் பாபு அவர்களை இழந்து துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.