LOADING

Type to search

இந்திய அரசியல்

“திருப்பரங்குன்றம் தீபத்தை வழக்கமான இடத்தில் ஏற்றி உறுதியான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக அரசை மனமாரப் பாராட்டுகிறேன்”

Share

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் திருநாளில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், அதை பிரச்சனையாக்கி அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் கலவர பூமியாக்க இந்துத்துவா அமைப்புகள் செய்த முயற்சியை முறியடித்து வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி அமைதியை நிலைநாட்டிய தமிழக அரசை மனமாரப் பாராட்டுகிறேன். சென்ற ஆண்டும் இதேபோன்ற சூழ்நிலையில் அப்போதைய அரசு இவ்வாறுதான் செய்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1818ஆம் ஆண்டில் பெரும் முக்கோணவியல் அளவை என்ற பெயரில் இந்தியா முழுவதும் இருந்த குன்றுகள், மலைகள், எவரெஸ்ட் சிகரம் உள்பட அனைத்தும் அளவிடப்பட்டன. இவ்வாறு அளவிடப்பட்ட மலைகளில் கல் கட்டுமான தூண்கள் எழுப்பப்பட்டு, அத்தூணின் மேல் பகுதியில் ஒரு புள்ளியும் அதைச் சுற்றி ஒரு வட்டமும் கொண்ட நிலையக் குறி பொறிக்கப்பட்டது. அதே குறி தூணின் அடியில் பாறையின் மீதும் வெட்டப்பட்டது. தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மலை உச்சிகளிலுள்ள 63 கல் தூண்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறையும், தொல்லியல் துறையும் இணைந்து அறிக்கை ஒன்றைத் தொகுத்துள்ளன. வருவாய் மற்றும் வனத்துறைகளும் இதில் பங்கேற்றன. இந்த அறிக்கை 5தொகுதிகளாக 1800 பக்கங்களுக்குமேல் அமைந்துள்ளது. 484 நிலையங்களின் விரிவான பட்டியல் அதில் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலைமேல் அமைக்கப்பட்டுள்ள இந்த அளவைத் தூணைத்தான் தீபத்தூண் என்று கூறி அங்கு தீபம் ஏற்றவேண்டும் என இந்துத்துவா வாதிகள் கூறுவது ஏற்க முடியாதது மட்டுமல்ல, பெரும் தவறாகும். நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக மலை உச்சியில் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் பெரிய கொப்பரையில் தீபம் ஏற்றப்படுகிறது. மதுரை நகரம் உட்பட பத்து மைல் சுற்றளவுக்கு உள்ள ஊர்களில் வாழும் மக்களுக்கு இந்த தீபம் தெரியும். தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளிலிருந்தே அவர்கள் தீபத்தை வணங்குவார்கள். இந்துத்துவா வாதிகள் கூறுகிறபடி அளவைக் கல் மீது ஒரு அகல் விளக்கு அளவுக்குத்தான் தீபம் ஏற்ற முடியும். மலையின் அடிவாரத்தில் இருப்பவர்களுக்குக் கூட அது தெரியாது. இந்த உண்மை நன்கு தெரிந்தும்கூட மதவெறியர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அளவைக்கல் தூண் மீது தீபம் ஏற்றவேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் நோக்கம் தீபத்தூண் மீது தீபம் ஏற்றுவது அல்ல. அதன் அருகே அமைந்திருக்கும் இசுலாமிய தர்காவைத் தாக்குவதுதான் அவர்களின் திட்டமாகும். தமிழ்நாட்டில் ஒரு பாபர் மசூதி இடிப்பை அரங்கேற்ற அவர்கள் துடிக்கிறார்கள். இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்கவேண்டுவது தமிழக அரசின் கடமை மட்டுமல்ல, தமிழக மக்களின் கடமையும் ஆகும்.

உச்ச நீதிமன்றம் இந்த ஆவணத்தை நன்கு பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் முன் வழங்கிய தீர்ப்பை மாற்றவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

மதவெறியர்களின் போராட்டத்தைப் புறக்கணித்து வழக்கம்போல தீபம் ஏற்றியதைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வணங்கி மனநிறைவுடன் சென்றுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி இந்த அரசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மதவெறியர்கள் கூப்பாடுப் போடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காலம்காலமாகத் தமிழ்நாட்டில் சகல மதங்களைச் சேர்ந்தவர்கள் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாகவும், சகோதர பாவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் தொடர்ந்து நீடிக்க அனைத்துக் கட்சியினரும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவோமாக.

அன்புள்ள,

(பழ. நெடுமாறன்)
தலைவர்.