ஈரான் ரசாயன ஆயுதம் தயாரித்து வருவதாக இஸ்ரேல் அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார்
Share
ஈரான் ரசாயன ஆயுதங்களை தயாரித்து வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கும் திறனை பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது: ஈரான் தற்போது ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த ஆயுதங்களை பயன்படுத்தும் திறனை ஈரான் பெறுவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது. ஈரான் எங்களை எதிர்கொள்வதற்கான வலிமையை பெறுவதற்காக மாற்று ஆயுதங்களை தேடி வருகிறது.ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் முதலில் தாக்குதல் நடத்தும் வரை காத்திருக்க வேண்டுமா? அல்லது முன்கூட்டியே ராணுவ நடவடிக்கை எடுத்து அந்த அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டுமா என்பதை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஈரான் ரசாயன ஆயுதங்களை தயாரித்து வருவதாக இஸ்ரேல் கூறிய குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் தவறானவை என்றும், நீண்டகால போரை தொடங்குவதற்காக அமெரிக்கா பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்குவதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.மேலும், ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து இஸ்ரேலுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அந்நாட்டின் சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இஸ்ரேல்-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.













