LOADING

Type to search

சினிமா

எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்காக ராஷ்மிகா மந்தனா கர்நாடக இசை கற்கிறார்

Share

எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்காக ராஷ்மிகா மந்தனா கர்நாடக இசை கற்கிறார். இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்காக அவர் முறைப்படி கர்நாடக இசை பயின்று வருவது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. கர்நாடக இசையின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்தார். தனது 10-வது வயதிலேயே எச்.எம்.வி. நிறுவனத்திற்காகப் பாடி இசைத்துறையில் சாதனை படைத்தார். தொடர்ந்து திரையுலகிலும் கால்பதித்த அவர், ‘சேவாசதனம்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் சில திரைப்படங்களில் நடித்தாலும், ‘மீரா’ திரைப்படம் அவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. இசைத்துறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய அவருக்கு 1954-ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 1968-ம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். 1998-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இவர் 2004-ம் ஆண்டு தனது 88-வது வயதில் காலமானார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ‘ஜெர்ஸி’, ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார். அல்லு அரவிந்த், பன்னி வாசு, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ‘எம்.எஸ். – எ லெகஸி ஆன் ஸ்கிரீன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பதற்காக ராஷ்மிகா மந்தனா முறைப்படி கர்நாடக இசை கற்கத் தொடங்கியுள்ளார். பாடுவது தனக்கு முற்றிலும் புதிய அனுபவம் என்றாலும், நடிப்பின் மூலம் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தாமல், எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாரின் இசை வடிவத்தையும் உண்மையாகக் கற்றுக்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.