மாவீரர் நாள் ஏற்பாடுகள் 2026 | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share
தாயகத்தில்,பிரதான சாலைகளிலும்,பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் பேரூர்களிலும், சிற்றூர்களிலும்,சாலையோரங்களிலும், சாலைகளுக்கு மேல் குறுக்காகவும், சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கின்றன. ஆங்காங்கே நினைவு வளைவுகளும் நினைவு வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. இம்முறை நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு வளாகத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு சிங்கள மாவீரர்களின் பெயர்கள் தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இந்ந விடயம் கொழும்பு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜேவிபியின் கார்த்திகைத் தியாகிகள் நாளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாளும் ஒரே மாதத்தில் வருவது வரலாற்றில் தற்செயலாக நிகழ்ந்த ஒன்றுதான். நாட்டை இப்பொழுது ஆட்சி செய்வது ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி. கடந்த வாரம் ஜேவிபி கார்த்திகைத் தியாகிகள் நாளை ஒருவகையில் அரச வைபவமாக,விமரிசையாக ஒழுங்கமைத்தது
விகார மஹாதேவி பூங்காவில் பார்த்த இடமெல்லாம் சிவப்பாகத் தெரிந்தது. மேடையிலும் சிவப்பு; பூக்களும் சிவப்பு; மெழுகுதிரிகளும் சிவப்பு; வந்திருந்த ஜேவிபி முக்கியஸ்தர்களும் சிவப்பு ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி அணிந்திருக்கவில்லை. வந்திருந்த ஜேவிபி உறுப்பினர்களின் குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் கட்சி ஆட்கள் பெரும்பாலானவர்கள் சிவப்பு மேலாடை அணிந்திருந்தார்கள். அதனால் அந்த இடம் முழுவதும் சிவப்பாகக் காட்சி அளித்தது.
இவ்வாறு தனது தியாகிகளின் நாளை அரச வைபவம் போல கொண்டாடும் ஒரு கட்சி, அந்தத் தியாகிகள் நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிழமை தள்ளி வரும் மாவீரர் நாள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது?
அரசாங்கம் நினைவு கூர்தலைத் தடுக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட சில சின்னங்களை, இலச்சினைகளை, பாடல்களைத் தடுக்கிறது. பொதுவாக நினைவு கூர்தல் தடுக்கப்படவில்லை. ஆனால் எல்லாவற்றையும் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்; எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; உங்களை நீளக்கயிற்றில் ஓட விட்டிருக்கிறோம் என்று தமிழ் மக்கள் உணரத்தக்க விதத்தில் போலீசார் நடந்து கொள்கிறார்கள். கிளிநொச்சியிலும் ஏனைய சில இடங்களிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன.எனினும் பொதுவாக மாவீரர் நாள் ஏற்பாடுகள் தடுக்கப்பட்டதாகச் செய்திகளில்லை.
தாயகத்தில், பிரதான சாலைகளிலும், பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் பேரூர்களிலும், சிற்றூர்களிலும், சாலையோரங்களிலும், சாலைகளுக்கு மேல் குறுக்காகவும், சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கின்றன.ஆங்காங்கே நினைவு வளைவுகளும் நினைவு வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன.
இம்முறை நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு வளாகத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு சிங்கள மாவீரர்களின் பெயர்கள் தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளன.இது கொழும்பு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
யாழ்பாணம் முத்திரைச் சந்தியில் சங்கிலியன் தோப்பு அல்லது கிட்டு பூங்காவில் “கார்த்திகை வாசம்” என்ற நிகழ்ச்சி இடம்பெற்றது. இது “தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால்” ஆண்டு தோறும் ஒழுங்கு செய்படுகின்றது. ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், தமிழகத்தில் இருந்து வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
இது மழைக் காலம். வானம் சாம்பல் நிறமாகக் காட்சியளிக்கிறது. மழை விட்டு விட்டுப் பெய்கிறது. மழையில் நனைந்து பாரமாகிய கொடிகள் மெதுவாக வீசும் காற்றில் சோகமாக அசைந்து உலர்கின்றன.
நகர மையங்களிலும் சிற்றூர்கள்,பேரூர்களின் மையங்களிலும், நினைவு வளாகங்களிலும் பாடல்கள் பரவலாக இசைக்கப்படுகின்றன. மாவீரர் வாரம் தமிழ்ப் பகுதிகளில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி சபைகளும்,கட்சிகளும், உள்ளூர் ஏற்பாட்டுக் குழுக்களும் எல்லா ஏற்பாட்டுக்களையும் செய்கின்றன.தாயகம் முழுவதுக்குமான பொதுவான ஏற்பாட்டு குழுவோ கட்டமைப்போ இல்லை.ஆனால் ஒவ்வொரு துயிலும் இல்லத்துக்கும் ஏதோ ஒர் ஏற்பாட்டுக் குழு உண்டு. அந்த ஏற்பாட்டுக் குழுவுக்குள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உண்டு. சேராதவர்களும் உண்டு.மாவீரர் குடும்பங்கள் உண்டு. முன்னால் இயக்கத்தவர்கள், தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் உண்டு.
எல்லாருமாகச் சேர்ந்து காசு திரட்டுகிறார்கள்.உள்ளூர் வணிகர்கள் உதவுகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவுகிறார்கள். அதனால் தாயகம் முழுவதும் பரவலாகவும் செறிவாகவும் மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடந்தன.
மாவீரர்களின் குடும்பங்களை அந்தந்தப் பகுதி அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கௌரவிக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் நிதி உதவி செய்கிறார்கள். மாவீரர் குடும்பங்களைப் பராமரிப்பதற்கும் பொதுவான கட்டமைப்புகள் எவையும் இல்லை. அந்தந்தப் பகுதியில் உள்ள தொண்டர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், முன்னாள் இயக்கத்தவர்கள், வணிகர்கள்…. என்று அவரவர் தத்தமது கொள்ளளவுக்கு ஏற்ப உதவி செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கின்றன.
மாவீரர் நாளுக்குரிய ஏற்பாடுகளை அந்தந்த ஏற்பாட்டுக் குழு செய்கின்றது. ஒரு பொதுவான கட்டமைப்பு இல்லை என்ற போதிலும், ஏற்கனவே 2009க்கு முன்பு பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளை சாத்தியமான அளவுக்கு எல்லா ஏற்பாட்டுக் குழுக்களும் பின்பற்றுகின்றன. இதனால் மாவீரர் நாள் அன்று எல்லாத் துயிலுமில்லங்களிலும் ஏற்பாடுகள் ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம் பெறுகின்றன.17 ஆண்டுகளுக்கு முன்னர் பின்பற்றப்பட்டு வந்த ஒரு நடைமுறை தொடர்ந்தும் அப்படியே பின்பற்றப்பட்டு வருவது என்பது அந்த தொடர்ச்சியறாத் தன்மையையும், அந்த நாள் எந்த அளவுக்கு மக்கள் மயப்பட்டிருக்கின்றது என்பதையும் காட்டுகின்றது.
தமிழ்த் தேசிய அரசியலில் எதிலும் ஒரு பொதுவான கட்டமைப்பு இல்லை. செம்மணிப் புதைகுழியைக் கையாள்வது தொடக்கம், வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதுவரை எதிலுமே ஒரு பொதுவான கட்டமைப்பு இல்லை. குறைந்தபட்சம் நினைவு கூர்வதற்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று எழுதியவர்கள் களைத்துப் போய் விட்டார்கள். அதற்காக முயற்சி செய்தவர்கள் களைத்துப் போய், சலித்துப்போய் விலகி விட்டார்கள். யாரும் இப்பொழுது கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவது தொடர்பாகக் கதைப்பதில்லை.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மாவீரர் நாளை ஒரு பொதுவான ஏற்பாட்டுக் குழு இல்லை என்று வெற்றிடம் உள்ள போதிலும், உரிய ஒழுங்கின்படி உரிய நேரத்தில், ஒழுங்காக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விடயத்தில் கட்சிகளுக்கு இடையிலான போட்டிகள் கட்சிகளுக்குள் காணப்படும் குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் என்பன பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை. அது தவிர்க்க முடியாதது.
நினைவு நாட்களை முதலில் அனுஷ்டித்தது பெருமளவுக்கு கட்சிகள் தான். சரிக்கும் பிழைக்கும் அப்பால் கட்சிகள்தான் முதலில் முன்வந்து நினைவு நாட்களை அனுஷ்டித்தன; அதற்காக ரிஸ்க் எடுத்தன. இப்பொழுதும் ஏற்பாட்டுக் குழுக்களின் பின்னணியில், அல்லது ஏற்பாட்டுக் குழுக்களுக்குள் கட்சிகள் உண்டு. அதுபோலவே பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் மாவீரர் வார ஏற்பாடுகளைச் செய்கின்றன. உள்ளூராட்சி சபைகள் தங்களுக்கு விசுவாசமான அரசியல்வாதிகளை முதன்மைப்படுத்துகின்றன.
சரிக்கும் பிழைக்கும் அப்பால், இப்பொழுது தமிழ்த் தேசிய அரசியல் என்பது கட்சிகளின் அரசியல்தான். அதில் மாவீரர் நாளும் உட்பட பெரும்பாலான எல்லா நினைவு நாட்களிலும் கட்சிகளின் செல்வாக்கு இருக்கும். மாவீரர் நாட்களில் சிந்தப்படும் கண்ணீரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்ற வேட்கை கட்சிகளிடம் இருக்கும். மாவீரர் நாளை முன்னிறுத்தி தமது அரசியல் இருப்பை பலப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் அரசியல்வாதிகளிடம் இருக்கும். கட்சிகளிடம் இருக்கும். அவ்வாறு கட்சி நோக்குநிலையில் இருந்து தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து மாவீரர் நாளை அணுகலாமா என்ற கேள்வி இங்கே எழும்.
ஆனால் அதுதான் களயதார்த்தம். ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை என்பது கட்சி அரசியல்தான். எனவே ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியான விடையங்கள் கட்சி அரசியலுக்கு ஊடாகத்தான் முன்னெடுக்கப்படலாம் என்பதுதான் கள யதார்த்தம். நினைவு நாட்களை முதலில் அனுஷ்டித்தது கட்சிகள்தான். நினைவு கூர்தலில் முதலில் ரிஸ்க் எடுத்தது கட்சிகளும், பல்கலைக்கழக மாணவர்களும்,மதகுருக்களும், குறிப்பிட்ட சில சிவில் அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும்தான். கட்சிகளாகத் துணிந்து முன் வந்து நினைவு நாட்களை அனுஷ்டித்த படியால்தான் இப்போது கிடைத்திருக்கும் நினைவு கூர்தலுக்கான வெளி ஸ்தாபிக்கப்பட்டது. ஐநாவின் நிலை மாறுகால நீதியின் கீழ் அல்ல.
நிலைமாறு கால நீதியின் தூண்களில் ஒன்று ஆகிய இழப்பீட்டு நீதியின் கீழ் தமிழ் மக்களுக்கு நினைவு கூரும் உரிமை உண்டு. ஆனால் இலங்கைத் தீவின் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் சின்னங்களை அல்லது குறிப்பிட்ட சில விடயங்களை நினைவு கூர முடியாது என்று உள்நாட்டு பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் அரசாங்கம் தடுக்கின்றது. இந்த விடயத்தில் அனைத்துலக நிலை மாறுகால நீதியின் ஒரு பகுதியான இழப்பீட்டு நீதி ஏற்பாடுகளுக்கும் உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கும் இடையே முரண்பாடு உண்டு. இந்த முரண்பாடு காரணமாகத்தான் ஒவ்வொரு நினைவு கூர்தலின் போதும் ஏதாவது ஒரு பிரச்சினை எழுகிறது. ”அந்தச் சின்னத்தை அகற்று; இந்த இலச்சினையை அகற்று” என்று கூறிக்கொண்டு போலீஸ் வந்து நிற்கிறது. திலீபனின் சிலை விவகாரத்தில் அந்தப் பிரச்சினை இன்றுவரை தீரவில்லை.
எனவே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தாயகத்தில் மாவீரர்களின் நினைவுகளை அனுஷ்டிப்பதில் கட்சிகளுக்கு அதிகம் பங்கு உண்டு. ஆனால் அது கட்சி கடந்த ஒரு செயற்பாடாகவே நடைமுறையில் உண்டு.













