LOADING

Type to search

இந்திய அரசியல்

தொகுதி மறுவரையறை பற்றி முதலில் பேசியது தி.மு.க. தான்யென உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்

Share

நாட்டிலேயே தொகுதி மறுவரையறை பற்றி முதலில் பேசியது தி.மு.க. தான்யென உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இதில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில், எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சில கட்சிகள், ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளன. இதன்படி, தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வடமாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான சதவீதத்தை குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தற்போது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்கு பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்திருப்பார்கள்.

அது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாக அமைந்திருக்கும். அதை நாம் தடுத்து விட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது என்று பேசினார். இதனால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை தி.மு.க. வெளிப்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னைக்கு வருகை தருகிறார். அவருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னைக்கு வருகை தருகின்றனர். அவர்களுடன் தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டியும் சென்னை வருகிறார்.

இதில், மு.க. ஸ்டாலினை அவர்கள் நேரில் சந்தித்து பேசுவார்கள் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தலாம் என தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, நாட்டிலேயே தொகுதி மறுவரையறை பற்றி முதலில் பேசியது தி.மு.க. தான். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் முடிவுகளை ஒருபோதும் தி.மு.க. எடுக்காது என்றார்.