வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை : மூடநம்பிக்கை பெரும் சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் – பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை
Share
அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை அறியாது இதனை விற்பனை செய்யத்தொடங்கி உள்ளார்கள்.
இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது. மூடநம்பிக்கை சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
ஆகாயத் தாமரை வீடுகளில் வளர்க்கப்படுவது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இயற்கை எந்த உயிரியையுமே தேவையற்றுப் படைப்பதில்லை. ஒவ்வொரு உயிரியும் முக்கியத்துவம் மிக்கவை. அவை பரிணாமிக்கும் சூழலின் சமநிலையில் இன்றியமையாத பங்களிப்பை நல்கி வருகின்றன. ஆனால், அவை இயற்கையாகத் தோன்றிய பிரதேசத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படும்போது அவற்றுள் சில இனங்கள் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகிவிடுகின்றன.
புதிய சூழலின் சமநிலையைக் குழப்பிச் சரிசெய்யமுடியாத அளவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகின் உயிர்ப்பல்வகைமையை அழித்துவரும் பிரதான காரணிகளில் ஒன்றாக இவ்வந்நிய ஊடுருவல் இனங்கள் உள்ளன. அத்தகைய ஒரு அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரமே ஆகாயத்தாமரை ஆகும்.
ஆகாயத் தாமரை தென் அமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட ஒரு அசுர நீர்க்களை. நீரே தெரியாத அளவுக்கு விரைந்து மூடிவளரும் ஆற்றல் பெற்றவை. இதனால், நீர்ச்சூழற் தொகுதியில் ஏனைய உயிரினங்களின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, நுளம்புகளின் பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
குளங்களில் இருந்து தப்பிச்செல்லும் இக்களை வயல் நிலங்களில் பல்கிப்பெருகி நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இலங்கை அரசாங்கம் ஆகாயத் தாமரையை அந்நிய ஊடுருவல் ஆக்கிரமிப்பு இனமாகக் கருதி அழிக்கத் தலைப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆரியகுளத்திலிருந்து இதனை முற்றாக அகற்றுவதற்கு மிகப் பெருந்தொகைப் பணமும் பெருங்காலமும் எடுத்தது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
இன்னும் ஏராளமான குளங்கள் ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்புக்குள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் அதிர்ஸ்ட தேவதை என்ற அந்தஸ்தை வழங்குவது அதற்கு அசுரப் பலத்தைப் பெற்றுக்கொடுத்துவிடும்.
வீடுகளிலிருந்து தவறுதலாக வெளியேறும் இதன் சிறு அரும்பே அதன் பல்கிப்பெருகும் ஆற்றலால் சூழலை அதன் ஆக்கிரமிப்பின்கீழ் விரைந்து கொண்டுவந்துவிடும். ஏற்கனவே பார்த்தீனியம், சீமைக்கருவேலம், இப்பில்இப்பில் போன்ற அந்நியன்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் எம் நிலம் ஆகாயத் தாமரையினாலும் வலிகளைச் சுமக்க நேரிடும். எமது விவசாயத் திணைக்களம் ஆகாயத் தாமரை தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.