LOADING

Type to search

கதிரோட்டடம்

60 வருடங்களுக்கு மேலான இலங்கைத் தமிழர் அரசியல் ‘மிகவும்’ மோசமான தலைவர்களின் கைகளுக்குச் தற்போது சென்றுள்ளதா?

Share

கதிரோட்டம் 23- 02-2024

60 வருடங்களுக்கு மேலான காலப்பகுதியை தற்போதைய ஆண்டில் கடந்து செல்லும் இலங்கைத் தமிழர் அரசியல் அதன் ஆரம்ப காலத்திலேயே சீராக இருந்ததா என்பதை உற்று நோக்கி ஆராய்ந்தால் அதற்கு “ஆம்’ என்ற பதில் உடனேயே வந்து விடாது. அதற்கு காரணம் இனத்தின் பெயரால் நிறுவப்பெற்ற கட்சிகளில் இணைந்து பாராளுமன்றக் கதிரைகளையும் மூதவை ஆசனங்களையும் தங்கள் நோக்கமாகக் கொண்டு இயங்கிய தலைவர்கள் எனப்பட்டோர் இனம் சார்ந்த அரசியலுக்கு அப்பால் ‘வர்க்கம்’ சார்ந்த அரசியல்தான் செய்தார்கள் என்பது புலனாகும்.
இன்றிலிருந்து சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் தங்களோடு தொண்டர்களையும் அழைத்து வருவார்களாம். ஆனால் இராணுவம் அல்லது பொலிஸ் படை வருகின்றபோது.

தொண்டர்களை அடிவாங்கச் செய்துவிட்டு தலைவர்கள் பறந்து விடுவார்களாம். ஒரு நாள் ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ சிவசிதம்பரம் அவர்கள் மாத்திரம் யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்பாக சத்தியாக்கிரகம் செய்த போது மற்றைய தலைவர்கள் எழுந்து ஓடிவிட அவர் மட்டும் தொண்டர்களுக்குத் துணையாக நின்று ‘அடி’ வாங்கியதாக தற்போது உயிரோடு உள்ள சிலர் சொல்வதைக் கேட்டிருக்கின்றோம்.

அதற்குப் பிந்திய எமது இனம் சார்ந்த போராட்டம் ‘சாதி அடக்கு முறைகளுக்கு’ எதிரான போராட்டமாகும். மேற்படி சாதி அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் ஆலயப் பிரவேசத்திற்கான போராட்டமாக உருவெடுத்த போது பல ‘அதிசியங்கள்’ அரசியல் தளத்தில் இடம்பெற்றிருந்தன. அந்த நாட்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி; ஆலயத்திற்குள் வழிபாட்டுக்காக செல்வதற்காக போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து சாதி அடக்கு முறையை ஊக்குவித்தவர் முன்னார் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் என்பவர் ஆவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற அவர் ‘இனம் சார்ந்த’ அரசியல் செய்தாரா? அன்றி ‘வர்க்கம் சார்ந்த’ அரசியல் செய்தாரா? என்பதை அவரது செயற்பாடுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த சாதீய அடக்கு முறைகளுக்கு எதிராக வடக்கில் பல கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன. குறிப்பாக சங்கானையில் உள்ள நிற்சாம் என்னும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்களைச் சேர்ந்தவர்களை உயர் சாதியினர் என்று சொல்லிக்கொண்டவர்கள் தாக்கினார்கள். ஆனால் அதற்கு எதிரான அடக்கப்பட்டவர்கள் திருப்பித் தாக்கும் போராட்டங்களை நடத்தினார்கள். அந்த போராட்டக்காரர்களுக்கு சீனச் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவளித்தனர். இதைக் கண்டு ‘கொதித்த’ அந்த நாட்களில் வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது “சங்கானையில் நிற்சாமம் தொகுதியில் கொம்யூனிஸ்ட்கள் அந்த பிரதேசத்தை வியட்னாம் ஆக்கப் பார்க்கின்றார்கள்” என்று முழக்கமிட்டார். இந்த ‘முழக்கம்’ எதன் அடிப்படையில் வந்தது. ‘இனம்’ சார்ந்த அரசியல? அல்லது ‘வர்க்கம்’ சார்ந்த அரசியலா? என்று பாராளுமன்றத்தில் கொம்யுனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமிர்தலிங்கம் அவர்களிடத்தில் கேள்வி எழுப்பி “ நீங்கள் வியட்னாமில் நடைபெறும் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றீர்களா? என்ற கேள்வியை முன்வைத்தார்கள்.

ஆனாலும். இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த 2024ம் ஆண்டிலும் கூட அவ்வாறான அரசியல் தலைவர்களே எமது மக்களை வழிநடத்துவதாக காட்டிக் கொள்கின்றார்கள். ‘கொழும்பு அரசியல்’ செய்யும் அவர்கள் எவ்வாறு இனம் சார்ந்த அரசியல் செய்ய முடியும். கொழும்புத் தலைவர்களினால் ஏவப்பட்ட ‘குழப்பவாதிகளாக’ தமிழ்த் தேசிய அரசியலுக்கு வந்தவர்களால் இந்த வாரத்தில் கூட குழப்பங்களுக்கு தூபம் இடப்படுகின்றது. நடைபெற்ற கட்சித் தலைவர் தேர்தலில் தோல்வியைத் தழுவ ஏற்பட்டதை சாதாரணமாக எடுத்து விட்டு அவர்கள் சொல்வது போல ‘மக்கள் சேவை’ செய்வதை விடுத்து நீதி மன்றங்களுக்கு தமிழர் அரசியலை கொண்டு சென்று காலத்தை வீணடிப்பவர்களை நாம் எவ்வாறு அழைக்கலாம். மிகவும் மோசமான அரசியல் தலைவர் என்போம் நாம்.!