LOADING

Type to search

இந்திய அரசியல்

பாஜக வேட்பாளர்கள் தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கி விட்டார்கள் – கி.வீரமணி அறிக்கை

Share

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தல் நேற்று (19-4-2024) தமிழ்நாடு முழுவதிலும் நடந்தது – பல மாநிலங்களிலும் முதல் கட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. நேற்றைய வாக்குப் பதிவின்போது எந்த இடத்திலும் கலவரமோ அல்லது வாக்குச் சாவடிகளில் சண்டைகளோ நடைபெறாமல், பல கட்சித் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் சுமூகமாகத்தான் நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்குள் வாக்குப் போட வந்தவர்களுக்கு- பல வாக்குச்சாவடிகளில் ‘டோக்கன்’ கொடுத்து வரிசையில் அவர்களை நிற்க வைத்து அனைவரும் வாக்குப் போட்ட பிறகே, வாக்குப் பெட்டிக்குச் ‘சீல்’ வைக்கப்பட்ட செய்திகளும் வந்துள்ளன! தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை! அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது. ”ஆரம்பத்தில் ‘அடானா’ (மகிழ்ச்சி ராகம்), முடிவில் ‘முகாரி’ (துன்பப் பாட்டு).” தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்?” என்று அவர் தெரிவித்துள்ளார்.