LOADING

Type to search

இந்திய அரசியல்

கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் காவல்துறை காவல்!

Share

தேனி மாவட்ட காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

     பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி காவல்துறை வழக்கு பதிந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. மேலும் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, தேனி பழனி செட்டிபட்டி காவல்துறையினர் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுமீதான விசாரணையும் நடைபெற்றது. 7 நாட்கள் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என  பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து இரண்டு நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி செங்கமலச் செல்வன் அனுமதி அளித்தார். மேலும் வழக்கறிஞர்கள் சந்திப்பிற்கும் அனுமதி அளித்தார். காலை, மாலை, இரவு என மூன்று வேளைகள் சவுக்கு சங்கரை சந்திக்க அவரது வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் மே.22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தவும் நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.