தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி, ஏழை, எளிய மக்களுக்கு என்ன செய்தார்? ராகுல் காந்தி கேள்வி
Share
“கடவுள் அனுப்பியதாக கூறும் நபர், 22 பணக்காரர்களுக்காக மட்டும் வேலை செய்கிறார். அம்பானி, அதானிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி என்று பிரதமர் மோடியிடம், செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: “நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன்.
அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்.”
இவ்வாறு மோடி கூறினார். பிரதமரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலானது.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு ராகுல் காந்தி எதிர்வினையாற்றியுள்ளார். டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
“தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி, 22 தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். அம்பானி, அதானியின் விருப்பங்களை நிறைவேற்றவே மோடி அனைத்தையும் செய்கிறார். ஏழை மக்கள் சாலை, கல்வி, மருத்துவமனை வசதிகள் வேண்டுமென கோரிக்கை வைத்தால் பிரதமர் மோடி எதுவும் செய்வதில்லை.
மக்களிடம் தான் பயாலஜிக்கலாக பிறக்கவில்லை, தன்னை பரமாத்மா அனுப்பியதாக கூறும் மோடி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனை வாசல்களில் மக்கள் உயிருக்கு போரடிக்கொண்டிருக்கும்போது அவர்களை டார்ச் அடிக்கச் சொன்னார். பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை இரண்டு நிமிடங்கள் செய்துகொடுக்கிறார். ஆனால், ஏழை எளிய மக்கள் கேட்பதை கண்டுகொள்வதில்லை.”
இவ்வாறு ராகுல் விமர்சித்தார்.
மேலும், தனது பேச்சை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடி இப்படி பேசுவதுபோல் யாரேனும் ஒரு சாமானியர் பேசினால், அவரை நேராக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மெட்ரோவில் ராகுல் பயணம்
முன்னதாக தனது டெல்லி பிரசாரத்தின் நடுவே, ராகுல்காந்தி, மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து சக பயணிகளுடன் உரையாடி மகிழ்ந்தார்.