தேர்தல் அதிகாரியை மாற்ற அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
Share
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. திமுகவினரின் சட்டவிரோத செயல்களை தட்டிக் கேட்ட பா.ம.க. மற்றும் அதிமுகவினர் மீது ஆளும் திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். திமுகவின் அத்துமீறல்களை தடுக்க வேண்டிய காவல்துறையும், தேர்தல் அதிகாரியும் அவர்களுக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓரளவாவது நியாயமாக நடைபெற வேண்டும் என்றால், தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் வராத வெளிமாநில கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர் தான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். எனவே, தேர்தல் அதிகாரி சந்திரசேகரை அந்தப் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். அவருக்கு பதிலாக வெளிமாநில இ.ஆ.ப. அதிகாரி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்களை தடுப்பதற்காக ஒன்றியத்திற்கு இரு பார்வையாளர்கள், விக்கிரவாண்டி பேரூருக்கு ஒரு பார்வையாளர் என மொத்தம் 5 பார்வையாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். திமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து இதுவரை பா.ம.க. சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார் .