2026 தேர்தல் வெற்றி – எடப்பாடி பழனிசாமி அதிரடி வியூகம்
Share
2026 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகுமாறு அ.தி.மு.க.வினருக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார். அப்போது வாக்கு சதவீதம் சரிவதற்கான காரணம் பற்றி கேட்டறிந்தார். இந்த ஆய்வு கூட்டத்தின்போது 40 வயதை கடந்த கட்சியினரின் ஆதரவு குறையாமல் அப்படியே இருப்பதை கண்டறிந்துள்ளார். தி.மு.க. வெற்றிக்கு வாக்கு வங்கியை விட கூட்டணி பலம் தான் காரணம். தி.மு.க.வை வீழ்த்த நமது வாக்கு வங்கியை மீட்டெடுத்தால் போதும் என்ற நிலையில் கீழ் மட்ட அளவில் பிரச்சனைகளை களையவும் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் புதிய வியூகம் வகுத்துள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட, கிளை கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும் 81 மாவட்ட செயலாளர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டங்களை நேரில் ஆய்வு செய்ய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் முதல் கூட்டம் சென்னை புறநகர் மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமியின் செயல் திட்டங்களை அவர்களிடம் விளக்கி கூறினார்கள். பூத் அளவில் கட்சியை வலிமைப்படுத்த முக்கியமான செயல்திட்டங்களை வகுத்துள்ளார்கள். ஒரு பூத்தில் சராசரியாக 1000 வாக்காளர்கள் இருப்பார்கள். இந்த பூத் ஒவ்வொன்றிலும் 9 நிர்வாகிகள் கட்டாயம் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரும் 100 வாக்களர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சியினர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சேர்க்க வேண்டும். இறந்தவர்கள், இடம் பெயர்ந்து போனவர்களின் பெயர்களை சரிபார்த்து நீக்க வேண்டும். இளைஞர்களின் ஆதரவை பெற வேண்டும். அதற்காக புதிய இளைஞர்களை தேட வேண்டியதில்லை. அ.தி.மு.க.வினரின் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கட்சியில் சேருங்கள். அவர்கள் தமிழக வெற்றிக் கழகம், சீமான் கட்சிகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுத்ததையும், இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்ததையும் நிறுத்தி வைத்திருப்பதையும் எடுத்து சொல்லி அ.தி.மு.க. பக்கம் இழுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் நடக்கும் சீர்கேடுகளையும் குறிப்பிட்டு அதை சீரமைக்க அ.தி.மு.க.வில் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். 2026-க்கான தேர்தல் வேலை அ.தி.மு.க.வில் இப்போதே சூடுபிடித்துள்ளது.