LOADING

Type to search

உலக அரசியல்

ஈரானை எப்படி தாக்க வேண்டும்… இஸ்ரேலுக்கு பைடன் அறிவுரை

Share

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டை நெருங்கி வரும் சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து உள்ளார். ஈரான் பெரும் தவறை செய்து விட்டது.

அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டார். எனினும், ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பின்னர், இந்த வெற்றி கடவுளிடம் இருந்து கிடைத்தது என்றும், வெற்றியை நெருங்கி விட்டோம் என்றும் ஈரான் தலைவர் அலி காமினி எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என அவர் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் பற்றி குறிப்பிட்டு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பதிலடி தருவது பற்றி இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது.

அவர்களுடைய இடத்தில் நான் இருந்திருந்தேன் என்றால், எண்ணெய் வயல்களை தாக்குவதற்கு பதிலாக, வேறு இலக்குகளை குறிவைப்பது பற்றி பரிசீலனை செய்திருப்பேன் என்றார். இஸ்ரேல், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் எல்லா உரிமையும் உள்ளது என்று அதற்கு ஆதரவாக பேசிய பைடன், பொதுமக்கள் உயிரிழப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவம் பற்றிய எச்சரிக்கையையும் வலியுறுத்தினார். தொடர்ந்து அவர், நான் கூறிய திட்டத்திற்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. இந்த மோதலில் தீர்வு ஏற்பட உலகம் முழுவதும் உள்ள கூட்டணி நாடுகளும் இதனை ஒப்பு கொள்கின்றன. கொடூர தாக்குதலுக்கு எதிராக, தன்னை பாதுகாத்து கொள்ள இஸ்ரேலுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஈரானிடம் இருந்து மட்டுமல்ல… ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்தும் கூட என்று அவர் பேசியுள்ளார்.