டில்லியில் பிரதமர் மோடி – மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு!
Share
டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் டில்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து நேற்று மாலை மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் முகமது மூயிஸை வரவேற்றனர். தொடர்ந்து, அவருக்கு அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் மாலத்தீவுக்கான கடனுதவி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடியுடன் மூயீஸ் ஆலோசித்ததாக தெரிகிறது. இப்பேச்சுவார்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.