LOADING

Type to search

இந்திய அரசியல்

141 பயணிகளைக் காப்பாற்றிய விமான ஓட்டிக்கு பாராட்டுகள் குவிந்தன

Share

விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறால் பயத்தில் தவித்த 141 பயணிகளையும் பத்திரமாக தரையிறக்கிய விமானிகளை நாடே கொண்டாடுகிறது. திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சக்கர இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் சுமார் இரண்டரை மணி நேரம் வானிலேயே வட்டமிட்டது. பயணிகளை அச்சமடைய வைக்காமல், மிக நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் விமானத்தை தரையிறக்க உதவியது 6 பேர் கொண்ட குழு.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை சாதுர்யமாக தரையிறக்கிய 6 பேர் குழுவில் இருவர் ஆண்கள், 4 பேர் பெண்களாவர். இதில் ஆண் தலைமை விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல் (Iqrom Rifadly Fahmi Zainal) பங்கு மிக முக்கியமானது. இவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 35. இக்ரோமுக்கு துணை விமானியாக செயல்பட்டவர் புனேவைச் சேர்ந்த பெண் விமானியான மைத்ரேயி ஷிதோலி. இவர் இந்தியா மற்றும் நியூசிலாந்தில் விமான பயிற்சி பெற்றவராவார். 28 வயதே ஆன மைத்ரேயி, 2019 முதல் நியூசிலாந்தில் பணியாற்றியவர். பின்னர் அவர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.

விமானியும் துணை விமானியும் விமானத்தின் எரிபொருளை குறைத்து எடையை குறைத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விமானப் பணியாளர்கள் குழுவில் மூத்தவராக இருந்த, இந்தியாவைச் சேர்ந்த ஆண் பணியாளரான சாகேத் திலிப் வாடானே, விமானப் பணிப் பெண்கள் லாய்ஸ்ரீராம் சஞ்ஜிதா தேவி, வைஷ்ணவி சுனில் நிம்பல்கர், சாஷி சிங் ஆகியோரும் பயணிகளை அச்சமடைய வைக்காமல் தரவுகளை பயணிகளுக்கு தொடர்ந்து அளித்தனர்.

விமான பணிப்பெண்கள் மூவரும் 25 வயதுக்கும் குறைவானவர்கள். இந்த 6 பேர் அடங்கிய குழு மிகக் கச்சிதமாக செயல்பட்டு, அவசர காலத்தில் சரியாக பயணிகளை வழிநடத்தி தரையிறக்கினர். 141 பயணிகளையும் பத்திரமாக தரையிறக்கிய பிறகு தலைமை விமானி இக்ரோமும், துணை விமானி மைத்ரேயியும் எந்த ஒரு பந்தாவோ, பதற்றமோ இல்லாமல் கூலாக தங்கள் கடமையை செய்த திருப்தியுடன் நடந்து சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.