பணக்கார நாடுகள் படுத்தும் பாட்டால் ஒட்டுமொத்த உலகிற்கும் பெரிய ஆபத்தென எச்சரிக்கை
Share
இந்த பூமியின் முக்கிய இன்டிகேட்டர்கள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் மனித குலமே அழிந்து போகும் நிலை ஏற்படலாம் என்று காலநிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பூமியின் முக்கிய இன்டிகேட்டர்கள் என்று பருவநிலை ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ள 35 விஷயங்களில் 25 ஏற்கனவே ஆபத்தான நிலையைத் தாண்டி விட்டதாக எச்சரித்துள்ளனர்.
வளர்ச்சி என்ற பெயரில் பூமியில் நாம் செய்யும் விஷயங்கள் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பூமியின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் அதீத மழை, வறட்சி ஆகியவை இதற்கு உதாரணம். முக்கிய இன்டிகேட்டர்கள்: இதற்கிடையே வல்லுநர்கள் பூமியின் முக்கிய இன்டிகேட்டர்கள் என்று 35 விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளனர். அந்த 35 விஷயங்களில் 25 விஷயங்கள் ஏற்கனவே ஆபத்தான நிலையை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு அளவு மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் 2 லட்சம் பேர் கூடுதலாகப் பூமிக்கு வருகிறார்கள் (அதாவது தினசரி இறப்பை விடப் பிறப்பு 2 லட்சம் கூடுதலாக உள்ளது). அதேபோல கால்நடைகள் எண்ணிக்கையும் தினசரி 1.70 லட்சம் என்ற அளவுக்கு அதிகரிக்கிறதாம் மக்கள் தொகை அதிகரிப்பது என்பது பூமியின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. இதுவும் வல்லுநர்கள் குறிப்பிட்ட 35 ஆபத்தான இன்டிகேட்டர்களில் ஒன்றாகும். அமெரிக்காவில் தீவிர சூறாவளி பாதிப்புகள், இந்தியாவில் 50 டிகிரி செல்சியஸை தாண்டிய வெப்ப அலைகள் அடிக்கடி நடக்க இதுவே காரணமாகும்.
கடந்த 20 ஆண்டுகளில் வளிமண்டலத்தில் மீத்தேன் அளவும் மிக ஆபத்தான அளவுக்கு அதிகரித்துவிட்டதாம். கார்பன் டை ஆக்ஸைடை விட இந்த மீத்தேன் 80 மடங்கு அதிக ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இவை கழிவுக் கிடங்குகள், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் இருந்தே அதிகம் வெளியேறுகிறது. ஆபத்தான மாற்றங்கள்: இந்த இன்டிகேட்டர்கள் தவிரவும் 28 ஆபத்தான மாற்றங்களும் நிகழத் தொடங்கியுள்ளன. குறிப்பாகத் துருவங்களில் உள்ள பனிப்பாறை உருகுவது போன்ற பேரழிவை ஏற்படுத்துவதாக உள்ளன. இதனால் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் தீவிர வானிலை மாற்றங்கள் நடக்கத் தொடங்கிவிட்டதாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த மாற்றங்களை உலகை மிகவும் அபாயகரமான நிலைக்குத் தள்ளுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதனால் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்தே வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் பேரழிவு விளைவுகளைத் தணிக்க சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியது அவசியம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். பணக்கார நாடுகளே காரணம்: முதலில் புதை படிவ எரிபொருள் மற்றும் மீத்தேன் உமிழ்வைக் குறுகிய காலத்தில் அதிகளவில் குறைக்க வேண்டும். அடுத்து தேவையில்லாத நுகர்வைக் குறைக்க வேண்டும்.
இந்த இரண்டுமே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பணக்கார நாடுகள் தான் அதிகம் செய்கிறது. இது மட்டுமன்றி அசைவ உணவுகளைக் குறைத்துவிட்டு தாவர அடிப்படையிலான உணவுகளை நோக்கி வருவதும் சிறந்த தீர்வு. அதேநேரம் இதில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது நமது நாட்டில் அசைவ உணவுகள் தினசரி ஓரிரு முறை தான் எடுத்துக் கொள்வோம். அது பிரச்சினை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் தினசரி அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால் அதிக கால்நடைகள் வளர்க்க வேண்டி உள்ளது. இதனால் மீத்தேன் அளவும் அதிகரிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பணக்கார நாடுகளின் அலட்சியப் போக்கால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கின்றன.