தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்து 086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Share
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர். பண்டிகை காலங்களில் ஆண்டு தோறும் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் எத்தனை சிறப்பு பேருந்துகளை இயக்குவது, சென்னையில் இருந்து மற்றும் பிற கோட்டங்களில் இருந்து எத்தனை பேருந்துகளை இயக்குவது, எந்தெந்த ஊர்களுக்கு எந்த பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீபாவளியையொட்டி வரும் 28-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 176 பஸ்களும், பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்து 910 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை திரும்ப வசதியாக 9 ஆயிரத்து 441 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.