30 டன் நிவாரண பொருட்களை பாலஸ்தீனத்துக்கு அனுப்பிய இந்தியா
Share
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 42 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் தாக்குதல் காரணமாக மக்கள் போதிய அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவியாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. 30 டன் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்து மற்றும் உபகரணங்கள், பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருட்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்கள், கலோரி அதிகம் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவை அடங்கும். இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.