LOADING

Type to search

உலக அரசியல்

டிரம்ப் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்

Share

அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், அவரை ஆதரித்த பிரபலங்கள் பலர், டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்கார் விருது வென்ற அமெரிக்க பாடகி பில்லி ஐலிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது பெண்கள் மீதான போர்” என்று பதிவிட்டுள்ளார். இவர் கமலா ஹாரிசுக்கு தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின்போது, தனது ரசிகர்களிடம் “கமலா ஹாரிசுக்கு வாக்கு செலுத்துங்கள்” என்று பில்லி ஐலிஷ் கேட்டுக் கொண்டார்.

இதே போல் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மற்றொரு ஹாலிவுட் பிரபலமான மூத்த நடிகை ஜேம் லீ கர்டிஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. பலர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள். பலர் திகைத்துப் போய் சோகமாக இருப்பார்கள்.

அமெரிக்காவும், ஜனநாயகமும் எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தல் முடிவின் அர்த்தம் என்ன? கொடூரமான, கட்டுப்பாடு மிகுந்த காலம் திரும்பி வருகிறது. தங்கள் உரிமைகள் மறுக்கப்படும் என்று சிறுபான்மையினரும், பெண்களும், ஓரினச் சேர்க்கையாளர்களும் அஞ்சுகின்றனர். நாம் தொடர்ந்து போராடுவோம். அதுதான் அமெரிக்கர்களின் அடையாளம். உண்மையான அமெரிக்கராக இருங்கள்” என்று பதிவிட்டுள்ள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகியும், கமலா ஹாரிசின் தீவிர ஆதரவாளருமான கார்டி பி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் உங்கள் அனைவரையும் வெறுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கமலா ஹாரிசை எதிர்த்து போட்டியிட்ட டொனால்டு டிரம்பை பாடகி கார்டி பி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.