பிரேசில் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு… ஒருவர் பலி
Share
சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர். பிரேசில் நாட்டின் மிப்பெரிய விமான நிலையம் குவாருல்கோஸில் உள்ள சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு நேற்று கருப்பு நிற காரில் வந்த சிலர் விமான நிலையத்திற்குள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயம் அடைந்தனர்.
கொலை செய்யப்பட்டவர் அன்டோனியா வின்சியஸ் லோபஸ் கிரிட்ஸ்பேச் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர். இவர் கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு சர்வதேச கிரிமினல் குரூப் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளியில் 2 பேர் ஈடுபட்டதாக தெரிகிறது. டெர்மினல் இரண்டில் ஒருவர் குண்டு பாய்ந்த கீழே விழுவது போல் தெரிகிறது. இந்த டெர்மினல் உள்ளூர் விமான போக்குவரத்திற்காக பயன்படும். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.