LOADING

Type to search

இந்திய அரசியல்

அரசு மருத்துவருக்கு கத்திக் குத்து – விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Share

சென்னை கிண்டியில் தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் ஒரு மாதமாகப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என விக்னேஷ் குற்றம்சாட்டி வந்ததாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில், ஆத்திரம் அடைந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, விக்னேஷ் உட்பட 4 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் காவலர்கள் குவிக்கப்பட்டு அந்த இடம் பரபரப்பானது.

இந்த நிகழ்வு குறித்து செய்தியறிந்து மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக” தெரிவித்தார். மேலும் மருத்துவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட்டிருப்பதாக” தெரிவித்தார். “இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.