“மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார் – அமைச்சர் மா.சுப்ரமணியன்
Share
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மருத்துவர் பாலாஜி மதியத்திற்கு பிறகு, தனியறைக்கு மாற்றப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவரை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளார். காலை அவரை சந்தித்தோம். நன்றாக பேசுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாலாஜி மதியத்திற்கு தனியறைக்கு மாற்றப்பட இருக்கிறார். தாக்குதல் நடத்திய விக்னேஷை நேற்றை காவல்துறை கைது செய்தனர். அவர்மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலாஜிக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறித்து கூட்டு தணிக்கை நடத்தப்படும். நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறை நடைமுறையில் உள்ளது” என தெரிவித்தார்.