LOADING

Type to search

உலக அரசியல்

துளசி கபார்ட்டுக்கு தேசிய உளவுத்துறை இயக்குனர் பதவி

Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இதில் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார். அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையை வரையறுத்து உள்ள அச்சமற்ற உணர்வை நமது உளவுத்துறை சமூகத்திற்கு கொண்டு வருவார். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்றார். தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கியமானவர். பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராக வும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார். ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. ஆவார். ஆனால் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவரது தாய் கரோல் கப்பார்ட் இந்துவாக மதம் மாறினார். இதனால் அவர் தனது 5 குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார். துளசி கபார்ட் ராணுவத்தில் பணியாற்றி லெப்டி னன்ட் கர்னல் அந்தஸ்து வரை உயர்ந்தார். ஈராக்கில் ராணுவ பணியை மேற்கொண்டார். முதலில் ஜனநாயக கட்சியில் இருந்த துளசி கடந்த 2022-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் டிரம்பின் குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவரது கொள்கைகள் மற்றும் பேச்சுக்கள் டிரம்பை கவர்ந்தது. இதன்மூலம் துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.