‘சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது’ – ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Share
சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என தற்போதைய அதிபர் ஜோ பைடன் தரப்பும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தரப்பும் தெரிவித்துள்ளன. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் வெடித்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து, யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் சண்டையை தொடங்கினர். ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸ்ஸில் நுழைந்ததை அடுத்து பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அவர் எங்கு சென்றுள்ளார் எனவும், அவர் சென்ற விமானம் குறித்த எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விவகாரத்தில் ஐக்கிய மாகாணங்கள் எதுவும் செய்யக்கூடாது. இது நம்முடைய போர் அல்ல. அது நடக்கட்டும். அது நமது நட்பு நாடல்ல. இதில் ஈடுபட வேண்டாம்” என்று கூறியுள்ளார். அதிபர் ஜோ பைடன் அரசும் சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. அதே நேரத்தில் இஸ்லாமிய தேசத்தில் (ஐஎஸ்) பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுக்க அமெரிக்கா அனுமதிக்காது” என்றார். சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காத வகையில் அங்கு 900 அமெரிக்க ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.