LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தானில் மேலும் 60 பேருக்கு தண்டனை: ராணுவ நீதிமன்றங்கள் அதிரடி

Share

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 9-ம் தேதி அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த ராணுவ நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அனுமதியைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்குகின்றன. கடந்த வாரம் 25 பேருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 60 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் இம்ரான் கானின் உறவினர் ஹசன் கான் நியாசியும் ஒருவர். லாகூர் படைப்பிரிவு தளபதியின் ஜின்னா இல்லம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் மே 9 வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்கீழ், அனைத்து குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை உள்ளது என்றும் ராணுவம் கூறி உள்ளது. ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டது தொடர்பான 100-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை ராணுவ சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ராணுவ அதிகாரிகளிடம் அரசாங்கம் கடந்த ஆண்டு ஒப்படைத்தது. பொதுமக்கள் மீதான ராணுவ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் காரணமாக, ராணுவ நீதிமன்றங்கள் தீர்ப்பை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இறுதித் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. எனினும், ராணுவ நீதிமன்றங்களில் விசாரணை நிறைவடைந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.