LOADING

Type to search

இந்திய அரசியல்

தேர்தல் விதிமீறல்: டில்லி முதல்-அமைச்சர் அதிஷி மீது வழக்குப்பதிவு

Share

70 உறுப்பினர்களை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், டில்லியின் கல்காஜி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தபுரி பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், அம்மாநில முதல்-அமைச்சருமான அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேரும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காணப்பட்டதாக டில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய காவல்துறையினரை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறையை மீறியதாக முதல்-அமைச்சர் அதிஷி மீதும், காவலரை தாக்கியதாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிஷி கூறியதாவது, “பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தேன், ஆனால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.