“மக்கள் மாற்றத்தை விரும்பினர்..” – டில்லி தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி பேட்டி
Share

மக்கள் மாற்றத்தை விரும்பினர் என்றும் அவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 47 இடங்களிலும், ஆம் ஆத்மி 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. இதன்மூலம், பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார். தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி, ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை சந்தித்து இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கு என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, “மக்கள் மாற்றத்தை விரும்பினர் என்பது அனைத்து கூட்டங்களிலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாம் கடினமாக உழைக்க வேண்டும், களத்தில் நிற்க வேண்டும், மக்களின் பிரச்னைகளுக்கு பதிலளிக்க வேண்டும்” என்றார்.