அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதி 2 பேர் பலி
Share

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் மரானா பகுதியில் அமைந்த விமான நிலையத்தில் காலை 8.28 மணியளவில் புறப்பட்டு சென்ற செஸ்னா 172எஸ் என்ற விமானமும், லன்கெய்ர் 360 எம்.கே. 2 விமானமும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. விமானங்கள் இரண்டும் ஒற்றை என்ஜின் கொண்டவை. இவை மோதி கொண்டதில் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தில் 2 விமானங்களில் இருந்த தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களாக விமான விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர். ஜனவரி 31-ந்தேதி பிலடெல்பியாவில் மருந்து பொருட்களை ஏற்றி சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். தரையில் இருந்த ஒருவரும் உயிரிழந்து உள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில், மேற்கு அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நோமி பகுதியில் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 10 பேரும் பலியானார்கள். கடந்த 2 வாரங்களில் இதுபோன்ற பெரும் விபத்துகளை அமெரிக்க விமான போக்குவரத்து துறை எதிர்கொண்டுள்ளது. இதுபற்றி துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சூழலில், 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.