டில்லி எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்
Share

டில்லி எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் அதிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பாஜக ஆட்டியை கைப்பற்றியது. இதனையடுத்து, டில்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். ரேகா குப்தா கடந்த பிப்.20ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில், டில்லி முன்னாள் முதலமைச்சர் அதிஷி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவர், டில்லி சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த அதிஷி, “என்னை நம்பிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கட்சிக்கும் நன்றி. வலுவான எதிர்க்கட்சியாக மக்கள் பிரச்னையை எழுப்புவோம்” என்றார்.