அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்காவுக்கு போலந்து அதிபர் அழைப்பு
Share

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் சூழலில், தங்கள் நாட்டிற்கும் அணு ஆயுத பாதுகாப்பு தேவை என ‘நேட்டோ’ நாடுகளில் ஒன்றான போலந்து வலியுறுத்தியுள்ளது. உக்ரைன், பெலாரஸ் மற்றும் ரஷியாவின் கலினின்கிராட் ஆகியவற்றுடன் போலந்து தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில், ரஷியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தங்கள் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த வேண்டும் என அமெரிக்காவுக்கு போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இதே கோரிக்கையை ஆண்ட்ரேஜ் டூடா முன்வைத்திருந்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தற்போது பிரான்ஸ் மட்டுமே அணு ஆயுதங்களை கொண்டுள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ரஷியாவின் அச்சுறுத்தல்களில் இருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க பிரான்ஸ் நாட்டின் அணு ஆயுத சக்தியை பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.