LOADING

Type to search

உலக அரசியல்

விண்வெளி நிலையத்திற்கு சென்ற நாசா குழு; சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு விடியல்

Share

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஆய்வு பணிக்காக பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர். ஒரு வார காலம் தங்கி ஆய்வு பணி மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய கால பரிசோதனைக்காக சென்ற அவர்களுடைய பயணம், விண்கல தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டு, பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்திலேயே சிக்கி தவிக்கும்படியான சூழலுக்கு தள்ளப்பட்டனர். பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து 9 மாதங்களாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்தனர். இந்நிலையில், விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து ராக்கெட் ஒன்றை அனுப்பி உள்ளது. இதற்காக, டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ரக ராக்கெட் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது. இந்த ராக்கெட் நேற்றிரவு 11.30 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-சுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாசா குழுவினர் இன்று காலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்து உள்ளனர். இதனால், நீண்டகாலம் காத்திருக்கும் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நடவடிக்கையை ஐ.எஸ்.எஸ். குழுவினர் மற்றும் விண்கல குழுவினர் கண்காணித்தனர். சுனிதா மற்றும் வில்மோர் இருவருக்கும் இது இறுதி கட்ட விண்வெளி திட்டம் என கூறப்படுகிறது. வருகிற 19-ந்தேதி வில்மோர் மற்றும் வில்லயம்ஸ் இருவரும் அந்த விண்கலத்தில் புறப்பட்டு பூமிக்கு திரும்புவார்கள். அவர்களுடன் நாசா விஞ்ஞானிகள் நிக் ஹேக், டான் பெடிட் மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் அலெக்சாண்டர் கோர்புனோவ், அலெக்சி ஓவ்சினின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோரும் பூமிக்கு திரும்புவார்கள். கடந்த செப்டம்பரில் நாசா விஞ்ஞானி நிக் ஹேக் மற்றும் ரஷிய விஞ்ஞானி அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இருவரும், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் திரும்ப அழைத்து வருவதற்காக காலியான 2 இருக்கைகளுடன் குரூ டிராகன் விண்கலத்தில் சென்றனர். எனினும், அவர்களை அழைத்து வரும் பணி பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளால் தாமதமடைந்தது. ஹீலியம் வாயு கசிவுகள், உந்துவிசை செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு, இதனால் அவர்கள் திரும்ப வேண்டிய விண்கலம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என கூறப்பட்டது. அடுத்து அவர்களை அழைத்து வர நாசா ஏற்பாடு செய்திருந்த ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் பேட்டரி பழுதுகளால், அவர்களுடைய பயணம் மார்ச்சுக்கு தள்ளி போனது. நாசாவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுக்கு இதற்கு முந்திய நிர்வாகத்தின் நடவடிக்கைகளே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார். இந்நிலையில், விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் பணி ஏறக்குறைய நெருங்கி விட்டது.