சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம்
Share

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) குறுகிய கால பரிசோதனை மேற்கொள்வதற்காக, கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர். அவர்கள் ஒரு வார காலம் நிலையத்தில் தங்கி ஆய்வு பணி மேற்கொள்ள இருந்தனர். இந்நிலையில், பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்களுடைய பயணம், விண்கல தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டது. இதனால், பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கி தவிக்கும்படியான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில், விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து ராக்கெட் ஒன்றை அனுப்பியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலத்துடன் பால்கன் 9 ரக ராக்கெட் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது. இந்த ராக்கெட் நேற்றிரவு 11.30 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-சுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விஞ்ஞானிகளுடன் இன்று காலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலம் சென்றடைந்து உள்ளது. இதனால், நீண்டகாலம் காத்திருக்கும் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கை நிறைவடையும் நிலையில் உள்ளது. வருகிற 19-ந்தேதி வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் இருவரும் அந்த விண்கலத்தில் புறப்பட்டு பூமிக்கு திரும்புவார்கள். இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் இணையும் வீடியோவை எலான் மஸ்க் வெளியிட்டு உள்ளார். விஞ்ஞானி டான் பெடிட், டிராகன் விண்கலத்தில் இருந்தபடி, எடுத்த வீடியோவை மஸ்க் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.