அமெரிக்காவில் இருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த நடவடிக்கை – டிரம்ப் அதிரடி
Share

பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி கூட்டம் கூட்டமாக அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். பெரும்பாலும் இவர்கள் சட்டவிரோதமாக எல்லையை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கடந்த 2022 அக்டோபரில் மனிதாபிமான அடிப்படையில் ‘சி.எச்.என்.வி’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், ‘சி.எச்.என்.வி’ திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடிபெயர்ந்த மக்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாக குற்றம் சாட்டி அந்த திட்டத்தை ரத்து செய்தார்.அதன் தொடர்ச்சியாக தற்போது, ‘சி.எச்.என்.வி’ திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் வசித்து வருபவர்களின் தற்காலிக குடியுரிமைக்கான சட்ட அந்தஸ்தை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கியூபா, ஹைதி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் ஏப்ரல் 24-ந்தேதிக்கு பிறகு அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழக்கின்றனர். எனவே ஏப்ரல் 24-ந்தேதிக்குள் அவர்கள் தாமாக தங்களின் நாடுகளுக்கு திரும்பாவிட்டால் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.