LOADING

Type to search

மலேசிய அரசியல்

ஆண்டுக்கு ஒரேமுறை கிடைக்கும் வாய்ப்பும் பறிபோனது உறுமி மேளக் குழுவினர் சோக இசை உறுமிமேளக் கடை வைத்திருக்கும் ரகு விவசாய பண்ணையில் வேலை

Share

தைப் பூச விழாவை மட்டுமே நம்பி இருக்கும் உறுமி மேள இசைக் குழுவினர், இந்த ஆண்டு தைப்பூச விழா நடைபெறாததால் ஆயிரக் கணக்கான உறுமி மேள இசைக் கலைஞர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் நட்டத்திற்கும் ஆளாகி உள்ளதாக மலேசிய உறுமி மேள இசை இயக்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் சி.ஆர். ரகு ராமு தெரிவித்தார்.

உறுமி இசைமீது கொண்ட ஆர்வத்தால், ஆரம்பத்தில் பகுதி நேரமாக செயல்பட்டு வந்தேன். காலப் போக்கில், இதில் மிகுந்த ஆர்வமும் பற்றும் ஏற்பட்டதால் சின்னராசு உறுமி மேளக் குழு என்ற பெயரில் சொந்தக் குழுவை அமைத்ததுடன், உறுமி மேளத்தை செய்யவும் பழுதுபார்க்கவும் கூடிய கடையையும் செமிஞியில் நிறுவினேன் என்று ரகு ராமு கூறினார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு தைப்பூசத்திருநாள் விழாவின்போது, பத்தமலையில் இரண்டு நாட்கள் தங்கி தொழில் செய்த வகையில், பன்னிரெண்டு பேர் கொண்ட எங்கள் குழுவிற்கு வெ.12,000 வருமானம் கிடைத்தது.

காவடி ஏந்திய பக்தர்களுக்கு இரவு பகலாக கண்விழித்து, பசியை மறந்து உறுமி மேளம் இசைத்ததால், செலவெல்லாம் போக ஆளுக்கு 800 வெள்ளி கிடைத்தது. இந்த வருமானம் வருடத்திற்கு ஒரேஒரு முறைதான் கிடைக்கும்.

இதைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளில் வாசிக்க அழைப்பு கிடைத்தால் கலந்து கொள்வோம்.

பெரும்பாலும் வாரக் கடைசி, அல்லது பொது விடுமுறை நாள் என்றால்தான் ஏற்றுக் கொள்வோம். காரணம், இந்த இசைக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் வேறுவேறு வேலை செய்வதால், வேலைக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க விடுமுறை நாளாக தேர்ந்தெடுத்துக் கொள்வோம்.

கடந்த 11 மாதங்களாக எந்த நிகழ்ச்சியும் எங்கும் நடைபெறாததால், எங்கள் இசைக் குழுவினரை ஒருவரும் நாடுவதில்லை. நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட உறுமி மேள இசைக்குழுவினர் இருக்கின்றோம். அனைத்துக் குழுக்களுக்கும் தைப்பூச விழாக் காலத்தின்போது கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும்.

சில ஆண்டுகளில், தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். அந்த சமயத்தில் வெளி ஊர்களில் இருந்தெல்லாம் உறுமி மேள இசைக் குழுவினரை அழைப்போம். இந்த, 2021-ஆம் ஆண்டில் வெறுமைதான் மிஞ்சியது.

செமிஞியில் வைத்திருக்கும் உறுமி மேளக் கடையில் மேளம் கட்டுதல், பழுது பார்த்தல் என வருடத்துக்கு 40, 50 ஆயிரம் வெள்ளிவரை சம்பாதிக்கும் நான், இப்பொழுது கடையை மூடிவிட்டு, வருமானத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில் மாற்று வேலை செய்து வருகிறேன் என்று ரகு ராமு கூறுகிறார்.

உறுமி மேளத்தின்மீது கொண்ட ஆர்வத்தாலும் இசையின்பால் எழுந்த ஆர்வத்தாலும்தான் நாங்கள் இதில் இணைந்துள்ளோம். எங்கள் செமிஞி சின்னராசு உறுமி மேள இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள 12 பேரில் எழுவருக்கு வங்கிப் பணி, அரசு வேலை போன்ற நிரந்தர வேலை இருக்கிறது. மற்றவர்கள் என்னைப் போல சிரமப்படுகின்றனர்.

ஒருவர் நண்டு, இரால் பிடித்து விற்கிறார். இன்னொருவர் உணவு விநியோகம் செய்கிறார். நான் ஒரு விவசாய-கால்நடைப் பண்ணையில் பணி புரிகிறேன். வாழ்க்கையில் புதிய பாடத்தைப் பயின்று வருவதாக செமினி சின்னராசு இசைக்குழுத் தலைவர் ரகு ராமு தெரிவிக்கிறார்.

இந்த கொரோனா கால பாதிப்பை எல்லோரும் பொறுமையுடன் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதேவேளை, இந்த நிலை இத்தோடு அகலவேண்டும். நீடித்தால், உலகம் தாங்காது என்று ரகு ராமு மேலும் சொன்னார்.

ரகு ராமு தலைமையில் சிப்பாங் வட்டாரத்தில் செயல்படும் இன்னொரு உறுமி மேள இசைக்குழுவான  ‘தில்லை ஜீவன் உறுமி மேள இசைக்குழு’வின் தலைவர் ஜீவன் செல்வன் என்னும் இளைஞர், தன்னுடையை குழுவைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் வேலை இழந்து துன்பப்படுகின்றனர் என்றார்.

கடந்த ஆண்டு பத்துமலை தைப்பூச விழாவின்போது இரண்டு நாட்கள் முகாமிட்டிருந்தோம். கிடைத்த வருமானத்தில் சாப்பாடு, போக்குவரத்து செலவு போக மீதியை எங்கள் இசைக்குழுவின் வங்கிக் கணக்கில் வைத்திருந்தோம். உருமி மேளங்களை பழுது பார்த்து சீர் செய்தல் போன்ற நோக்கத்திற்காக எல்லா பணத்தையும் செலவு செய்துவிடாமல் எப்பொழுதும் சேமித்து வைப்போம்.இந்த ஆண்டு ஒன்றுக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று சிறுரக லோரி ஓட்டுநரான ஜீவன் செல்வன் குறிப்பிட்டார். 

நக்கீரன் – Nakkeeran  013-244 36 24