தமிழ் சினிமாவில் ‘மகாகவி’ பாரதி பாடல்கள் – வீணை மைந்தன்
Share
அத்தியாயம் 14
“வெள்ளைமலர்மிசை, வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத் தமிழ்வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்;
எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
இராத் தென்றன் நாவினிலே
வெள்ள மெனப் பொழிவாய் சக்திவேல்,
சக்திவேல் சக்திவேல் சக்திவேல்!
என வாணியைத் தொழுது பாடிய பின்பே,
மேடைதோறும் தான் பங்கு கொள்ளும் நிகழ்ச்சியை ஆரம்பிப்பது அவரது வழக்கம். யார் அவர்? அவர்தான் பாரதி யார்?, என மேடைதோறும் பாரதியார் வரலாற்று பெருமைகளை பேசியும் – நடித்தும் பெரும் தொண்டாற்றி வரும் ‘இசைக்கவி’ ரமணன் என்று பெயர் கொண்ட கவிஞர் – எழுத்தாளர் – ஆன்மீக சிந்தனையாளர் ஆவார்.
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சென்னை “பாரத வித்யா பவனும்”, “ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பு நிறுவனமும்” இணைந்து நடத்தி வரும் “காலங்களில் அவன் வசந்தம்” எனக் கவியரசு கண்ணதாசனை கொண்டாடிவரும் கவிதை இசை நிகழ்ச்சியின் சொந்தக்காரர் திரு இசைக்கவி ரமணன் ஆவார்.
அவ்விதமே வாழும் பாரதியாக வேடமணிந்து மகாகவியையே நேரில் பார்த்து மெய் சிலிர்பது போன்ற உணர்வைத் தந்து, பாரதி அய்யாவின் மேன்மையையும் – அவர் எழுத்துக்களையும் அர்த்த புஷ்டியுடன் விளக்கி வருகிறார்.
‘மகாகவி’ பாரதியின் நேரடி சீடர் போன்று எண்ணம் – செயல் – கவிதை யென இயங்கிவரும் வாழும் பாரதியான திரு.இசைக்கவி ரமணன் அவர்களை வாழ்த்தி பாராட்டுவோமாக! ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிடத் தவறிய சில தகவல்களை இவ்விதழில் பதிவு செய்கிறேன். அதாவது, பாரதியின் பாடல் உரிமைகளை அக்காலத்திய பிரபல நகை வர்த்தக நிறுவனமான “சுராஜ்மல் அண்ட் சன்ஸ்” நிறுவனம் ரூபாய் 600 க்கு வாங்கி வைத்திருந்தது.
அந்த நிறுவனம் புரோட்காஸ்ட்(BROADCAST) என்ற பெயரில் 1934 இல் இருந்து வெளியிட்ட இசைத்தட்டுகளுக்காக ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்பின் 1946இல் ஏவிஎம் நிறுவனம் ‘நாம் இருவர்’ படத்தின் மூலம் பாரதியாரின் பாடல்களை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன், ‘சுராஜ்மல்’ நிறுவன உரிமையாளர் ஜெயசிங்காலால் மேத்தாவிடம் பேரம்பேசி ரூபாய் (10,000) ரூபாய் பத்தாயிரம் கொடுத்து அதன் உரிமையை பெற்றது.
வாழ்நாள் முழுவதும் குறைந்த வருமானத்தையே கண்ட அந்தப் பெரும் புலவன் பாடல்களுக்கு அவர் மறைந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் பெருமதிப்பு ஏற்பட்டது!

‘மகாகவி’ பாரதி ஐயாவின் சில குறிப்பிட்ட பாடல்கள், பல படங்களில் இடம் பெற்றிருந்தன. உதாரணமாக, ‘சின்னஞ்சிறு கிளியே…’
‘மங்கியதோர் நிலவினிலே..’
‘காக்கைச் சிறகினிலே..’
‘நல்லதோர் வீணைசெய்தே..’
‘மனதில் உறுதி வேண்டும்..’
‘ஓடி விளையாடு பாப்பா..’ என பாடல் பல படங்களில் வெவ்வேறு மெட்டுக்களில் இசையமைக்கப்பட்டிருந்தன.
‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…’ பாடல் ‘நீதிக்கு தண்டனை’ – ‘குற்றங்கடிதல்’ படத்தில் இடம் பெற்றது போல் 1951 இல் வெளியான ‘மணமகள்’ படத்திலும் இணைக்கப்பட்டிருந்தது.
‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ஜீ. ராமநாதன் அய்யர் இசையமைப்பில் இணைக்கப்பட்ட “காற்றுவெளியிடை கண்ணம்மா..” பாடல் மலையாள இசையமைப்பாளர் மோகன் சித்தாராவால் ‘தன்மத்ரா’ படத்திலும் கையாளப் பட்டிருந்தது!
1954 இல் வெளிவந்த ‘விளையாட்டுப் பொம்மை’ படத்தில் பிரபல நடிகரும் – பாடகருமான டி ஆர் மகாலிங்கம் அவர்கள், இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா இசையமைப்பில் பாரதியாரின்… ‘மோகத்தை கொன்றுவிடு’, ‘தீர்த்தக்கரையினிலே…” என இரு பாடல்களைப் பாடியுள்ளார்.
காலத்தை மீறி கனவுகண்ட ‘மகாகவி’யின் கவிதைகள் காலத்தை வென்று இன்றைய கலைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பவையாக இருப்பது நமது பேறு. காதல் – வீரம் – தேசபக்தி – பாசம் – சோகம் – ஆனந்தம் என திரைப்படம் எதிர்பார்க்கும் அனைத்து உணர்ச்சிகளையும், வெளிப்படுத்தும் வரிகளுடன் இன்னமும் பல நூறு கவிதைகள் பாரதி புதையலில் காத்திருக்கின்றன.
அகழ்வாராச்சி செய்வது போல், பாரதி ஐயாயின் கவிதை புதையலை தோண்டி எடுத்து, நவீன திரைப்பட படைப்பாளிகள் அவரது பாடல்களைப் படங்களில் பயன்படுத்துவது தமிழுக்குச் செய்யும் சிறந்த தொண்டாகும்.
இனி, பாரதி ஐயாவின் அதிகமான பாடல்களைப் பயன்படுத்திய படமாக வெளிவந்த ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பார்ப்போம்!
இப்படம் மூலம் தான் மறைந்த கலைஞரான அமரர் ரகுவரன் அறிமுகமாகி புகழ் பெற்றார். மிக திறமையையும் – வித்துவ மேன்மையும் நிறைந்த கர்நாடக சங்கீத வாத்தியக் கலைஞரான எல். வைத்தியநாதன் அவர்களுடைய இசைக் கோர்வையில் படத்தில் 11 பாரதி பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அவையாவன…
1. காக்கைச் சிறகினிலே நந்தலாலா… பாடியவர் கே ஜே யேசுதாஸ் (இப்பாடல் ‘திருமால் பெருமை’ படத்தில் பி சுசிலா அம்மையாரால் பாடப் பெற்றதாகும்.)
2. வீணையடி நீ எனக்கு… மேவும் விரல் நான் உனக்கு.. கே ஜே யேசுதாஸ் – பி நீரஷா இருவரும் இணைந்து பாடியிருந்தனர். மீண்டும் பெண் குரலில் 3. வீணையடி நீ எனக்கு.. நீரஷாவால் பாடப்பெற்றது.
4. நல்லதோர் வீணை செய்தே.. நலங்கெடப் பூமியில்.. பாடியவர் ராஜ்குமார் பாரதி
5. நெஞ்சில் உரமுமின்றி.. ராஜ்குமார் பாரதி இவர் பாரதிக்கு உறவினர்.
6. அச்சமில்லை.. அச்சமில்லை.. பாடியவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்
7. ஓடி விளையாடு பாப்பா.. பாடியவர்கள் கே ஜே யேசுதாஸ், சாய்பாபா இருவரும் (‘கப்பலோட்டிய தமிழன்’ படத்திலும் இப்பாடல் இடம் பெற்றிருந்தது.)
8. ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடியவர் பி நீரஷா (கல்கியின் ‘கள்வனின் காதலி’ – ‘சிந்துபைரவி’ படங்களிலும் இப்பாடல் இடம்பெற்றிருந்தது)
9. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே..’ பாடியவர் பி சுசீலா முதன் முதலாக ஏவிஎம்மின் ‘நாம் இருவர்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களான ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே..’ பாடல் ஏழாவது மனிதனிலும் இடம்பெற்றுள்ளது. பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி – மாதங்கி – சுசீலா – சாண்டில்யன் ஆகியோர்.
‘எந்த நேரமும் நின்மையல் ஏறுதடி..’ பாடியவர் கே ஜே யேசுதாஸ்.
அடுத்த இதழில்…
மகாகவி பாரதியாரின் எட்டு பாடல்கள் இடம்பெற்ற பிரபலமான படம் எது?













