33வது மாவீரர் நாளிலிருந்தாவது தமிழ் மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சி கொள்ளவேண்டும். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
Share
1989ல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் அவர்கள் வீரகாவியமான நவம்பர் 27ஐ தேசியத் தலைவர் மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினார். சிறிலங்கா அரசின் கொடிய அடக்குமுறைக்கு மத்தியிலும் தமிழீpமக்கள் திரட்சியாக வருடாவருடம் நினைவுகூரத் தவறவில்லை. வழமை போல் 2022லும் 33 வது மாவீரர் நாளை நினைவுகூரத் தமிழர் தேசம் தயாராகி வருகிறது. எமது மண்ணின் மீட்சிக்காய் மரணித்த மாவீரர்கள் பிரிக்க முடியாத தமிழர் பிரதேசத்தை உருவாக்கும் குறிக்கோளுடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்தவே தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கினார்கள்.
நிலம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் என்பன இராணுவபலத்தை வைத்து அழிக்கப்பட்டால் தேசிய இனவழிப்பு எனப் பொருள்படும். ஈழத்தமிழர்கள் இதில் இருந்து தப்பி ஒரு தேசிய இனமாக வாழவேண்டுமாயின் ஈழத்தமிழர்களது பூர்வீகத் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமை, மற்றும் தேசியம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமிழர்களின் தாயகக் கனவுகளை சிதறட்டிக்கும் முகாமாக புலம் பெயர் நாடுகளில் இருந்து சில அமைப்புகளும் தனிநபர்களும் குள்ளநரியாகச் செயற்படும் ரணில் விகரம்சிங்கவின் கூட்டு சதிக்குள் சிக்குண்டு தமிழின அழிப்புக்கு துணையாகிறார்கள். நாட்டில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கவனத்தில் கொள்ளாமல் பலர் முதலீடுகளைச் செய்ய புலம்பெயர் தமிழர்களைத் தூண்டுகிறார்கள்.
பிரித்தானியர் வெளியேறிய காலத்தில் இருந்தே கல்லோயா, மகாவலி, பதவியா போன்ற பல குடியேற்றத் திட்டங்களின் ஊடாக தமிழர் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களவர்களைக் குடியேற்றினர். அதன் தொடர்ச்சியாக வவுனியா, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு போன்ற தமிழர் பிரதேசங்கள் பிரிக்கப்படும் நிகழ்ச்சிகளும் திரைமறைவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தமிழர் பிரதேசங்கள் மற்றும் தமிழின தேசிய அடையாளங்களை பாதுக்காக்க நாம் எல்லோரும் ஒன்று இணைந்து குரல் கொடுக்க வேண்டியது மிக அவசரமாக நடைபெறவேண்டும். இனப்படுகொலைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய இனம் தம் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைச் சாட்சியங்களை ஐநாவிற்கும் சர்வதேசத்திற்கும் பதிவிடுவதற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கான அறிவுறுத்தல்களை தமிழ் அமைப்புகள் தாமதிக்காது செயற்படுத்த வேண்டும். முக்கியமாக 1983 காலப்பகுதியில் இடம்பெற்ற இனவழிப்பின் போது, அரசாங்கம் சிங்களக் காடையர்களுக்கு வழங்கிய வாக்குப்பட்டியல் பதிவு விபரங்களின்; மூலம் தமிழர்கள் அடையாளப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
நடைபெற்ற கறுப்பு யூலை படுகொலைகளுக்குப் பின்னரே பல தமிழீழ விடுதலை இயக்கங்கள் உருவாகின. எந்த சக்திகளுக்கும் விட்டுக்கொடுப்பின்றி நிலைத்த ஒரே விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே. புலிகளின் காலத்திலேயே தமிழர் தாய் நிலங்கள் பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டது. மண்மீட்புப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் 2009 வரை போர் என்ற போர்வையில் இரு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர் போன்று குண்டு வீச்சு மூலமும், செல் தாக்குதல்கள் மூலமும், நேரடியான துப்பாக்கிச் சூடு, கிளைமோர் தாக்குதல்கள் மூலமும், நடைபெற்ற படுகொலைகள் மற்றும் வெள்ளை கொடியுடன் சரண் அடைந்தபோது நடந்த படுகொலைகள், திட்டமிட்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, பாலியல் வன்முறைகள், 2009 க்கு பின் தொடர்ச்சியாக நடைபெறும் பலவிதமான காணி அபகரிப்புகள் போன்ற விடயங்கள் யாவும் எம்மால் சாட்சியங்களாக சர்வதேசத்தின் முன் வைக்கப்படவேண்டிய ஆவணங்களாகும்.
மக்களால் சனநாயக முறையில் தெரிவுசெய்யப்படாத சனாதிபதியாகியிருக்கும் ரணில் விக்ரமசிங்கா தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களாகிய வடக்கு- கிழக்கை பிரித்து தமிழரின் பூர்வீக அடையாளங்களை அழிக்க நரித்திட்டங்கள் தீட்டுகிறார். தமிழரின் தொன்மை நகரான திருகோணமலைப் பிரதேசத்தின் பெரும் நிலப்பகுதியை பிரித்து பொலநறுவை மாகாணத்துடன் இணைக்கும் செயல்திட்டங்கள் முன்னெக்கப்படுகிறது. நாடு வங்குரோத்து நிலைக்கு வந்தும் தமிழர்களைப் பலவழிகளிலும் திட்டமிட்டு இனவழிப்புச் செய்யும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றார். வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேசம் ஆகும். இன்றும் தமிழர்களின் பூர்வீக பிரதேசத்தை துண்டாடும் செயல்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. தாயகத்தில் உள்ள செயற்திறன் அற்ற பெரும்பான்மையான தமிழ் அரசியல்வாதிகளை நம்பி இனிமேல் ஒன்றும் நடக்கப்போவதில்லை. மாவீரர் கனவு பலிக்க வேண்டுமாயின் ஆளுமையுள்ள நேர்மையான இளைய தலைமுறையைக் கட்டியெழுப்ப வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
ஐநா மனிதவுரிமைச் சபையின் 46-1 பிரேரணையின்படி மனித குலத்துக்கெதிராக நடைபெற்ற குற்றங்களுக்கான சாட்சியங்களைச் சேகரித்து அதை மனிதவுரிமை சபையில் பாதுக்காக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது. ஏதிர்காலத்தில் ஒரு விசாரணை நடைபெறும் போது அந்த விசாரணைக்கு இந்த சாட்சியங்கள் உதவும் என்ற நோக்கத்துடன் இந்த வரைபு செய்யப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபை OHCHR Investigation on Sri Lanka (OISL) விசாரணையின் போது, 21 பெப்ரவரி 2002 முதல் 15 நவம்பர் 2011 வரையான கால எல்லைகள் வரையறுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. 46-1 பிரேரணையின் மூலம்; முன்வைக்கப்பட்ட 120,000 சாட்சிகள் தம்மிடம் இருப்பதாகவும், சாட்சியங்களை விசாரித்து பதிவுகளை மனிதவுரிமை சபை ஆணையகம் பாதுகாக்கும் என்றும் இப்பிரேரணையில் கூறப்பட்டது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உட்பட பல புலம்பெயர் கட்டமைப்புகள் சரியான முறையில் விசாரணைகள் செய்யப்படவேண்டும் என்று இணைத்தலைமை நாடுகளுடனும்;, மனிதவுரிமை சபை உயர் அதிகாரிகளுடனும், பல சந்திப்புகளை நடத்தி தமது கருத்துகளை காட்டமாக முன்வைத்துள்ளனர். விசாரணக்குரிய கால எல்லைகள் 1948ல் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று ஐநாவால் உருவாக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவால் முன்வைக்கப்படும் சாட்சியங்களை எந்தக் கால எல்லை நியதிகளும் இல்லாமல் தாம் பதிவு செய்வதாக கூறி இருக்கிறார்கள். சர்வதேசம் 2014ம் ஆண்டு ஐநாவிலும் சர்வதேச அமைப்புகளிலும் எமது சாட்சியங்களை எவ்வாறு நாம் பதிவுசெய்தோமா, அதேபோன்று 1983ல் நடைபெற்ற இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்கள், அதற்;கு முந்திய காலப்பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள், என்று தமிழர்களுக்கு நடைபெற்ற எல்லா குற்றத்திற்கான சாட்சியங்களையும் காலவரையறை அற்ற முறையில் சேகரிக்க கூடிய சூழல் இன்று அமைந்துள்ளது. தமிழர்கள் அனுபவித்த, பார்த்த, இழந்த விடயங்களை சாட்சிகளாக பதிவிடும் படி உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பங்களை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
75 ஆண்டுகளாக தமிழர்களை கருவறுத்துக்கொண்டு இருக்கும் சிங்கள தேசம் இன்றுவரை மனமுவந்து இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களுக்கு இதயசுத்தியுடன் நிரந்தர அரசியற்தீர்வை வழங்க மறுத்துள்ளது. ஆனால் 75 நாட்களுக்குள் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதாக பூச்சாண்டிகாட்டுகிறார் ரணில் விக்கிரமசிங்க. தமிழர்களது பிரச்சனை அபிவிருத்திப் பிரச்சனை அல்ல. எமது பிரச்சனை இருப்புப் பிரச்சனை என்பதை சிங்களம் தனது பொருளாதாரச் சிதைவின் மத்தியிலும் ஏற்க மறுக்கிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளிடம் கடன் பெறமுடியாத அளவிற்கு இனப்பிரச்சனை இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்து பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் சிங்கள அரசியல்வாதிகளே. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்றுவரை இனவாத அரசியலைச் செய்த சிங்கள அரசியல்வாதிகளும் அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த பௌத்த பிக்குகளுமே நாட்டை நாசாமாக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும்.
நாடு பொருளாதாரத்தில் அதளபாதாளத்தில் இருக்கும் நிலையிலும் கூட ரணில் அரசின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பெரும் பகுதியை இரணுவச் செலவுகளுக்காக ஒதுக்கியுள்ளது. தமிழர் பகுதிகளில் போதைப்பொருளைத் தடுப்பது என்ற போர்வையில் வடக்குக் கிழக்கல் பெருமளவு இரானுவத்தைக் குவித்துள்ளனர். தமிழர் பகுதிகளுக்கு போதைப்பொருளைக் கடத்துபவர்களே இராணுவமும் காவல்துறையும் என முன்னாள் முதலமைச்சரே பகிரங்கமாகப் பத்திரிகைளுக்குப் பேட்டியளித்துள்ளார். இலங்கையின் பணவீக்கம் 70 வீதத்தைத் தாண்டி உலக சாதனை படைத்துள்ளது. தோற்றுப்போன தேசத்தின் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருமானம் இல்லாமல் பணத்தை அச்சிட்டு நாட்டை வீழ்ச்சி நிலைக்குக் கொண்டு போகிறார். பிரித்தானியர்கள் நாட்டைவிட்டுச் செல்லும் போது (1948) நாட்டைக் கடனாளியாக விட்டுச்செல்லவில்லை. ஆங்கிலேயர் வெளியேறிய 5வது வருடமே சிங்களத் தலைவர்கள் நாட்டைக் கடனுக்குள் மூழ்கடித்துவிட்டனர்.
1979ம் ஆண்டு அவசரஅவசரமாக அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக்கூட இன்றுவரை அகற்ற எந்த முயற்சியும் எடுக்காத சிங்கள அரசுகள் இச்சட்டத்தின் ஊடாக தமிழர்களை நசுக்குவதிலேயே முனைப்புக் காட்டி வந்தன. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. புலிகளை மீளுருவாக்க முயற்சிகள் நடைபெறுகிறது என்று பூச்சாண்டி காட்டி இச்சட்டத்தை அகற்றாமல் நீடித்துக்கொண்டே போகிறார்கள். 2009ம் ஆண்டிற்கு பின் தமிழ்க் கட்சிகளின் முரண் நிலையே இன்று தமிழ் மக்களை இன்றை இழிநிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. ‘போதகர்களுக்குள் சண்டை வந்தால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்’ தமிழ் அரசியல்வாதிகளின் முரண்நிலையை சிங்கள தேசம் சரியாகப் பயன்படுத்துகிறது. தேசிய இனப்பிரச்சனை என்பது வடக்கு-கிழக்கு தமிழ்மக்களின் கூட்டுப் பிரச்சனையாகும். பாராளுமன்ற அமர்வின் போது ரணில் விக்கிரமசிங்க வடக்குத் தமிழ்க் கட்சிகளை மட்டும் பேச அழைத்தார். இது பிரித்தாளும் ரணிலின் நரித்தந்திரம் என்பதை தமிழ்த் தலைவர்கள் உணர்ந்து ஏன் சுட்டிக்காட்டவில்லை?
13வது திருத்தம் என்பது தமிழர்களின் அரசியல் தீர்வை எந்த வகையிலும் பூர்த்தி செய்யாத ஒற்றையாட்சிக்குட்பட்ட சட்டமாகும். மத்திய அரசில் தொங்கி ஊஞ்சலாடும் உழுத்துப்போன மாகாணசபை முறையை கூறி நிற்கும் வெற்றுக் காகிதமாகும். காவற்துறை, காணி மற்றும் நிதி அதிகாரங்கள் இல்லாத 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க எந்த வகையிலும் போதுமானதல்ல என்று ஒரு பகுதியினரும், 13ஐ இப்போது ஏற்றுக்கொண்டால் தான் இந்தியா உள்ளே வந்து தமிழர்களின் இனபிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என்று வேறு தரப்பும் 13வது திருத்தச்சட்டம் தமிழர்களின் அரசியல் தீர்விற்கு ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று இன்னொரு தரப்புமாக மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கின்றனர். யாருமே மாவீரர்கள் கனவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கேட்கவும் இல்லை விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளவுமில்லை. அதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் சொல்லும் காரணம் 6ம் திருத்தச்சட்டமான பயங்கரவாதத் தடைச்சட்டம் வட்டுக்கோட்டை பற்றிப் பேசுவதற்கு இடமளிக்கவில்லை என்பதே. அப்படியாயின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையாவது நீக்க வேண்டும் என யாராவது பேசினார்களா என்றால் அதுவும் இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் எனப் பேசுவதற்கு எந்தச் சட்டமும் தடைபோடவில்லை என்பது இவர்களுக்குத் தெரியாதா?
தமிழர் பிரதேசங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாதென இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியும், இனப்படுகொலையாளியும், ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தனது அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைக் கக்கிக் கொண்டு சன்னதமாடுகிறார். ஐநா மனித உரிமை ஆணையகத்தில் பலமுறை தமிழ்ச் செயற்பாட்டளர்களுடன் இனத்துவேசம் பேசி முரண்பட்டவரும் இவரே. இவரைப் போன்ற இனவாதிகள் இருக்கும்வரை ஈழத்தமிழருக்கு நீதி கிடைப்பதைத் தடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். அதேவேளையில் இனவழிப்பைச் செய்யும் சிங்கள அரசாங்கத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் சோரம்போன தமிழ் அரசியல்வாதிகளை இனங்கண்டு ஒதுக்கப்பட வேண்டிய பாரிய பொறுப்பும் தமிழ் மக்களுக்கு உண்டு.
2009ற்கு பின்னர் துரிதகதியில் நடந்து வரும் இரத்தம் சிந்தாத தமிழின அழிப்பை புரிந்துகொள்ளக் கூடிய அரசியல் விழிப்புணர்ச்சி தமிழ் மக்களுக்குத் தேவை. இதே அரசியல் விழிப்புணர்ச்சி தான் எமது விடுதலையை நோக்கிப் பயணிக்கக் கூடிய நேர்மையான தமிழ்த் தலைமைகளை இனங்காண உதவும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாக பதிவுசெய்கிறோம். இரத்தம் சிந்தி விடுதலைக்காக நேர்மையுடன் போராடிய 50,000ற்கு மேற்பட்ட மண்ணுறங்கும் வீரமறவர்களின் ஆத்மாவின் துணை என்றும் தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருக்கும்.
-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-













