அஜய் தேவ்கன், மாதவன் படத்தில் இணையும் ஜோதிகா!
Share
இந்தியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்குமார் ராவ்-ன் ‘ஸ்ரீ’ என்றப் படத்திலும் நடித்து வந்தார் நடிகை ஜோதிகா.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘Doli Saja Ke Rakhna’ என்ற படத்தின் மூலம் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், சூர்யாவின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் வாயிலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர், அஜித்தின் ‘முகவரி’, விஜய்யின் ‘குஷி’, கமல்ஹாசனின் ‘தெனாலி’, சூர்யாவின் ‘காக்க காக்க’, விக்ரமின் ‘தூள்’ உள்பட பல வெற்றிப் படங்களை தந்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்ததுடன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
எனினும், சில வருடங்களில் ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் மறுபிரவேசம் கொடுத்த ஜோதிகா, பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘Kaathal:The Core’ படத்திலும், இந்தியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்குமார் ராவ்-ன் ‘ஸ்ரீ’ என்றப் படத்திலும் நடித்து வந்தார் நடிகை ஜோதிகா. இதில் ‘ஸ்ரீ’ படத்தில் ஜோதிகாவின் போர்ஷன் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில், அப்படத்தின் கதாநாயகனான ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை தான் என்றும், பாலிவுட் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களுடன் நடித்து தனது நடிப்பை பகிர்ந்து கொள்ள தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றும் நடிகை ஜோதிகா உருக்கமான பதிவை தனது இணையாள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.













