LOADING

Type to search

சினிமா

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Share

‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரகு தாத்தா’.

இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. எஸ். சுரேஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராம்சரந்தேஜ் லபானி மேற்கொண்டிருக்கிறார்.‌ படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசமான ஆடைகளை வடிவமைக்கும் பணியினை தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா கையாண்டிருக்கிறார்.

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ‘கே. ஜி. எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், முதன் முதலில் நேரடியாக தமிழில் தயாரிக்கும் ‘ரகு தாத்தா’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.‌