கிண்டி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Share
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன்15) மாலை திறந்து வைத்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கலைஞர். 15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஒரு செங்கல் கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படும்.
ஏழை எளிய மக்களின் மருத்துவராக இருந்தவர் கலைஞர். இந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர். 1975ம் ஆண்டில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை அன்றைய ஜனாதிபதி பக்ருதீன்அலிஅகமது வெளியிட இருந்தார். அப்போதும் அவரை வரவிடாமல் தடுத்தனர்.
மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. நாட்டிற்கே பல முன்மாதிரியான திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது. எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இருசக்கர அவசர ஊர்தி, பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி என பல்வேறு திட்டங்கள் உள்ளன.
கலைஞர் வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். வேலூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தங்கும் விடுதி கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.













