“பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்க” டெல்லி போலீஸ் கோர்ட்டில் கோரிக்கை
Share
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மைனர் மல்யுத்த வீராங்கனை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்த அறிக்கையில், மைனர் வீராங்கனை தந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் கிடைக்காததால் இந்த வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் மீதான விசாரணையில் டெல்லி போலீஸார் இன்று (ஜூன் 15) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யதனர்.
முன்னதாக காலையில் மூத்த போலீஸ் அதிகாரிகள் தரப்பில், “மல்யுத்த வீராங்கனைகள், வீரர்களுக்கு ஜூன் 15-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதால் நாங்கள் அதனைக் கடைபிடிப்போம். விசாரணையின் ஒரு பகுதியாக, பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு விபரம் கேட்டு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. அந்நாடுகளில் நடந்த போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், போட்டியின் போது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கியிருந்த ஹோட்டலில் பதிவாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் போன்றவைகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அவர்களின் பதில் கிடைத்ததும் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மைனர் மல்யுத்த வீராங்கனை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.













